தன்னுடைய இனத்தின் விடுதலைக்காகப் போராடியவர்கள் இன்னும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்து குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டவர் ஐந்து வருட சிறைத்தண்டனை அனுபவித்தது போதுமானது என்றால் இதில் என்ன நியாயம் இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விடயம் தான் அண்மையில் இடம்பெற்ற அரசியற் கைதிகளின் விடுதலை. இது தொடர்பில் அரசுடன் இணைந்திருக்கும் பிரதிநிதிகள் உரிமை கோரும் விதமாக சில முகநூல் பதிவுகள், அறிக்கைகளை விடுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
ஆனால் பாராளுமன்றம் தொடங்கி ஒருவருடமாகியும் அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பில் அவர்கள் அரசாங்கத்திற்கு எவ்வித அழுத்தமும் கொடுத்ததாக நாங்கள் அறியவில்லை. நாங்கள் அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பில் கேள்வி எழுப்பும் போதுகூட எங்கள் கருத்துகளைக் குழப்பும் செயற்பாடுகளையே அவர்கள் செய்திருந்தார்கள்.
தற்போது இடம்பெற்ற அரசியற் கைதிகள் சிலரின் விடுதலை வரவேற்ககத்தக்க ஒரு நல்ல விடயம். பதினாறு அரசியற் கைதிகளை விடுவித்தமை வரவேற்கத்தக்க விடயமாக இருந்தாலும் ஏனையவர்ககளையும் விடுவிக்கும் வரையில் எங்கள் அழுத்தங்களைக் குறைக்க மாட்டோம். நாங்கள் தொடர்ச்சியாக எங்கள் அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டே இருப்போம்.
மேற்படி விடுவிக்கப்படவர்களின் வழக்குகள் 2015 தொடக்கம் 2020ம் ஆண்டு காலப்பகுதியில் தான் முடிவுக்கு வந்திருக்கின்றது. கடந்த நல்லாட்சி காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாகத் தான் அரசியற் கைதிகளின் விடுதலை தற்போது சாத்தியமாக்கப்பட்டிருக்கின்றது.
அந்த வழக்குகள் முடிந்த காரணத்தினால் தான் அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கக் கூடிய நிலைமை ஏற்பட்டது. ஆனால், இன்னும் பலர் சிறையிலே வாடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும் வோனையான விடயமே.
அரசியற் கைதிகள விடுதலை செய்யப்படப் போகிறார்கள் என்று சொன்னவுடன் எத்தனையோ தாய்மார், மனைவி, குழந்தைகள், சகோதரங்கள் எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக பதினாறு பேர் மாத்திரம் தான் வெளியில் வந்திருக்கின்றார்கள்.
அது எமது உறவுகள் பலருக்கு ஏமாற்றமாக இருந்தாலும், சிறையில் இருக்கும் ஏனையவர்களையும் விடுதலை செய்வதற்காக நாங்கள் சில சில போராட்டங்களையும், அழுத்தங்களையும் கொடுக்கத் தயாராக இருக்கின்றோம்.
அத்துடன் குறிப்பாக வடக்கு கிழக்கிலே அரசியற் கைதிகளின் விடுதலையுடன் சேர்த்து முகநூல்களில் பதிவுகளை மேற்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்கும் இளைஞர்களின் விடுதலைக்காவும் அரசியற் கைதிகளின் விடுதலைக்குச் சமாந்தரமாகக் குரல் கொடுக்க வேண்டும்.
ஏனெனில் பல தாய்மார்கள் என்னை வந்து சந்திக்கின்ற போதும் கூட விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மகன்மார் இன்னும் விடுவிக்கப்படவில்லை என அவர்களின் மனக்குழுறல்களை வெளிப்படுத்துகின்றார்கள்.
இந்த விடயங்களையும் நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். பல இளைஞர்களைக் கைது செய்து தற்போது ஒரு வருடமாகவும் போகின்றது. இவ்வாறே விட்டுக் கொண்டிருந்தால் இருபது வருடங்கள் வரைக்கும் இNதுபோன்றே சிறையில் வைத்திருப்பார்கள்.
முகநூலில் பதிவிட்ட குற்றச்சாட்டுக்காக சிறையில் ஒரு வருடம் இருப்பதென்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயம். அந்த வகையில் இவர்களின் விடுதலைக்காவும் தொடர்ச்சியாக நாங்கள் அழுத்தம் கொடுப்போம்.
துமிந்த சில்வா அவர்களின் விடுதலையை நியாயப்படுத்தும் முகமாக அவர்களின் கீழ் இயங்கும் சில ஊடகங்கள் செயற்படுகின்றன.
அவ்வாறான ஊடகம் தற்போதையை ஜனாதிபதியை ஜனாதிபதியாக்குவதற்கும் தற்போதைய அரசாங்கத்தினை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கும் கடுமையாகப் பாடுபட்ட ஒரு ஊடகம். ஆனால் கடந்த சில மாதங்களாக அரசினை தாக்கி அரசிற்கு எதிரான செய்திகளை வெளியிட்டதை அவதானிக்க முடிந்தது.
நாட்டிலே மக்களின் பிரச்சினைகள் எத்தனையோ இருக்க ஒரு நடிகையைக் கைது செய்தது தான் பெரிய பிரச்சினை போன்று வெளிப்படுத்தி அரசிற்கு பாரிய அழுத்தங்களைக் கொடுக்கும் முகமாகச் செயற்பட்டது. அந்த நேரத்திலே எனக்கு சந்தேகம் ஏற்பட்டது துமிந்த சில்வா அவர்களை விடுதலை செய்வதற்காக ஒரு நாடகமமாக இது இருக்கலாம் என்று. அது போலவே நடந்து விட்டது.
தற்போது அவரை விடுதலை செய்ததற்கு அவர் போதியளவு சிறைத் தண்டனை அனுபவித்து விட்டதாக அமைச்சர் நாமல் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்ததாகச் சொல்லி உயர்நீதிமன்ற நீதியரசர்களினால் தண்டனை வழங்கிய ஒருவர் ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தது போதுமானதாக இருந்தால். போராட்ட காலத்தில் ஏதோவொரு அடிப்படையில் கைது செய்து பல வருடங்களாகச் சிறையில் வாடும் அரசியற் கைதிகள் அனைவரையும் ஏன் இதுவரை விடுதலை செய்யவில்லை என்ற கேள்வி அனைவர் மனதிலும் இருக்கின்றது.
ஏனெனில் இன்று அரசியற் கைதிகள் என்று நாங்கள் கூறும் எவருமே தங்களின் சொந்தத் தேவைக்காகவோ, தனிப்பட்ட நலனுக்காகவோ தாக்கியவர்களோ அல்லது கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தவர்களோ அல்ல.
அவர்கள் எதோவொரு விதத்தில் தங்களின் இனத்தின் விடிவுக்காகப் போராடிய குற்றச்சாட்டில் சில சில தவறுகளுக்காகக் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். தன்னுடைய இனத்தின் விடுதலைக்காகப் போராடியவர்கள் இன்னும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொலைசெய்து குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டவர் ஐந்து வருட சிறைத்தண்டனை அனுபவதித்தது போதுமானது என்றால் இதில் என்ன நியாயம் இருக்கின்றது.
ஜனாதிபதி அவர்கள் தனது முதலாவது உரையிலே தெரிவித்திருந்தார் ஒரு நாடு ஒரு சட்டம் என்று. ஆனால் இங்கு ஒரு நாடு எத்தனையோ சட்டங்களாகப் போய்க்கொண்டிருப்பதையே அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.
Post a Comment