பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய, யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்காக அடுத்த கட்டமாக, மேலும் 50,000 சினோபாம் கோவிட் 19 தடுப்பூசிகள் நாளை எடுத்துவரப்படவுள்ளன.
இவை, கோவிட் தொற்று அதிகமுள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. அத்துடன் தற்போது இடம்பெற்றுவரும் இரண்டாம் தவணை தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் நிறைவடைந்தவுடன் இவற்றை மக்களுக்கு வழங்கும் பணிகள் ஆரம்பமாகும் என்றும், தடுப்பூசி வழங்கும் மையங்கள் தொடர்பில் அதிகாரிகள் விரைவில் அறிவிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே முதற்கட்டமாக வழங்கப்பட்ட இரண்டு தவணைக்குமான தடுப்பூசிகளை யாழ்.மாவட்ட மக்கள் ஆர்வத்தோடு பெற்றுக்கொண்ட காரணத்தினால், இந்த மேலதிக 50,000 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடிந்ததாக பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் தெரிவித்தார்.
மேலும், அடுத்த கட்ட தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும், யாழ் மாவட்ட மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையிலும் உரிய தரப்பினருடன் தொடர்ச்சியாக பேசி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment