நான் ஒரு நிர்வாக அதிகாரி ஆகையால் நடைமுறைப்படுத்தப்படும் சுற்று நிருபங்களுக்கு அமையவே என்னால் செயற்பட முடியும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
யாழ்.மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டங்கள் சுற்றுநிருபத்துக்கு அமையவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
வீட்டு திட்டங்களுக்கான தெரிவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தெளிவான சுற்றறிக்கைகள் மூலம் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவு தொடர்பில் ஏற்கனவே பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தல்கள் இடம்பெற்றது. மக்கள் தமது தெரிவுகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக இவ்வாறான நடைமுறை பின்பற்றப்பட்டது.
அதன் பின்னர் சில பிரதேச செயலகங்களில் இருந்து தமது பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், தாம்தெரிவு செய்யப்படக் கூடிய தகுதி உள்ளவர்கள் புறக்கணித்து விட்டார்கள் என முறைப்பாடுகள் எமக்குக் கிடைத்தது.
அதனடிப்படையில் புதிய சுற்றறிக்கை மூலம் நீக்கப்பட்டவர்கள் ஏன்? நீக்கப்பட்டார்கள் தெரிவு செய்யப்பட்டவர்கள் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்கள்? என புள்ளி அடிப்படைகளை தெளிவுபடுத்துமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
தெரிவு செய்யப்படும் பயனாளிகளின் இறுதிப் பட்டியல் எதிர்வரும் 19 ஆம் திகதி காட்சிப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார். வீட்டுத்திட்டம் தொடர்பில் தற்போது எமக்குக் கிடைக்கும் பெரும்பாலான முறைப்பாடுகள் அனாமதேய முறைப்பாடுகளாக உள்ளன.
எமது மாவட்டத்தில் 21 ஆயிரம் வீடுகளுக்கான தேவைப்பாடு காணப்படுகின்ற நிலையில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான 1,532 வீடுகளும்,6 இலட்சம் ரூபா பெறுமதியான 630 வீடுகளுக்கும் அனுமதி கிடைத்தது.
வீட்டுத்திட்ட அடிக்கல் நாட்டுவது தொடர்பில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்கு மட்டுமல்ல, ஏனைய மாவட்ட இணைத் தலைவர்களுக்கும் ஜனாதிபதியால் வழங்கப்படுகின்ற பொதுவான நடைமுறைகளே காணப்படுகின்றன.
நான் மாவட்ட செயலாளர் என்ற வகையில் நிர்வாக நீதியான நடைமுறைகளை மட்டும் செயற்படுத்த முடியுமே தவிர அரசியல் ரீதியாக செயற்பட முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment