வடமாகாணம், தென்மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது ஆளுநர்களாக உள்ளவர்கள் மாற்றப்பட உள்ளனர் என்று புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அதன்படி, தென் மாகாண ஆளுநராக நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் சகோதரரும், கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் எம்.பியமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நியமிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென்மாகாண ஆளுநர் விலி கமகே ஊவா மாகாண ஆளுநராக நியமிக்கப்படவிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இதுதவிர, நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு எம்.பி பதவியை விட்டுக்கொடுத்த ஜயந்த கெட்டகொடவுக்கு வடமாகாண ஆளுநர் பதவி வழங்க யோசனை முன்வைக்கப்பட்ட போதும் அதனை அவர் நிராகரித்திருக்கின்றார்.
பின்னர் அவருக்கு இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் பதவிக்கு யோசனை முன்வைக்கப்பட்ட போதும் அதனையும் அவர் நிராகரித்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அதேபோல வடமாகாண ஆளுநர் பதவிக்கு சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவரது பெயரும் முன்மொழியப்பட்டதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்திலும் சில அமைச்சர்களின் ஆசனங்கள் வழமைக்கு மாறாக மாற்றப்பட்டதாக தெரியவருகிறது.
இலங்கை அமைச்சரவை சம்பிரதாயத்திற்கமைய, ஜனாதிபதி, பிரதமருக்கு அடுத்த ஆசனத்தில் சிரேஸ்ட அமைச்சர்கள் அமரும் இடத்தில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமர்ந்ததாக சொல்லப்படுகின்றது.
அந்த இடத்தில் முதல் ஆசனத்தில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இவ்வளவு நாட்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த மாற்றங்கள் அனைத்தையும் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்தே மேற்கொள்கின்றார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
Post a Comment