முன்னாள் மத்திய அமைச்சர் பி.ஆர். குமாரமங்கலம் மனைவி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் அவர்களின் மனைவி கிட்டி குமாரமங்கலம் டெல்லியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் வசித்து வந்தார். இவர் உச்சநீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார்.
நேற்று இரவு அவரது வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் கிட்டி குமாரமங்கலம் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அவரது வீட்டுக்கு அருகில் பணிசெய்த ராஜூ லக்கான் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரிகள், இரவு 11 மணிக்கு கிட்டி குமாரமங்கலம் வீட்டில் பணிபுரியும் பெண் எங்களுக்கு தொலைப்பேசியில் தகவல் தெரிவித்தார்.
ராஜூவுக்காக இரவு 9 மணிக்கு கதவு திறந்துள்ளார். ராஜூ மற்றும் அவரது உதவியாளர்கள் இருவர் வீட்டிற்கு வந்துள்ளனர். பணிப்பெண் மஞ்சுவை தாக்கி தனி அறையில் அடைத்து வைத்துள்ளனர். வீட்டிற்குள் சென்றவர்கள் கிட்டியை கொலை செய்ததாக அவர் கூறினார்.
வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்துடன் அவர்கள் வெளியேறியதையடுத்து தன்னை கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்துக்கொண்டு அக்கம் பக்கத்தினரின் உதவியை நாடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவரது மகன் மோகன் குமாரமங்கலத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சுவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜூவை கைது செய்துள்ளோம். தப்பிச்சென்ற இரண்டு நபர்களை தேடிவருவதாக போலீஸார் கூறுகின்றனர்.
Post a Comment