இந்தியத் தலைநகர் புது டில்லியில் பாராளுமன்ற கட்டிட தொகுதிக்கு அருகில் மீண்டும் விவசாயிகள் போராட்டங்களை நடத்த உள்ளனர் .
புதிய மூன்று விவசாய விதிகள் தமது வாழ்வாதாரத்தை வெகுவாக அச்சுறுத்துவதாகவும் அவற்றை அரசு மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டங்களை நடத்தவுள்ளனர்.
ஏற்கனவே டெல்லியின் பிரதான வீதிகளில் முகாமிட்டு ஏழு மாதங்களாக விவசாயிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நீண்ட போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
அப்போராட்டம் கோவிட் பேரிடர் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் பாராளுமன்றம் மீண்டும் இந்தவாரம் கூடுவதை அடுத்து விவசாயிகள் பாராளுமன்றம் நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இன்று 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மத்திய டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் உள்ள மிகுவல் ஈரா வான்அவதான மையப்பகுதியில் கூடியுள்ள அதேவேளை இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
பாராளுமன்ற கூட்டத்தொடர் வரும் ஆவணி மாத நடுப்பகுதி வரை நீடிக்க இருப்பதால் தினமும் இந்த போராட்டம் இடம்பெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்,
டெல்லி காவல்துறையுடன் விவசாயிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பின் போராட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ள காவல்துறை போராட்டக்காரர்கள் அனைவரும் டெல்லி அரசால் விடுக்கப்பட்ட கோவிட் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.