உணவுப் பொருட்கள் - எரிபொருட்களின் விலைகளை உடனே குறை!
விவசாயிகள் - மீனவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்!
கொரோனா தடுப்பூசியை அனைவருக்கும் வழங்கி இயல்பு வாழ்வுக்கு வழி செய்!
அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய்!
ஆகிய பிரதான கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (10.07.2021) மு.ப. 9.30 மணியளவில் யாழ். பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளது.
அரசியல் கட்சிகள், வெகுஜன அமைப்புகள், விவசாய சம்மேளனங்கள், மீனவர் சங்கங்கள், இளைஞர் அமைப்புகள், சூழலியல் செயற்பாட்டாளர்கள், சமூக நலன்விரும்பிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பங்குபற்றவுள்ள இம் மாபெரும் கவனயீர்ப்பில் அரசாங்கத்தை நோக்கி,
உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரித்து உழைக்கும் மக்களின் வயிற்றில் அடிக்காதே!
கட்டுப்பாடின்றி அதிகரித்துச் செல்லும் அத்தியவசிய பாவனைப் பொருட்களின் விலைகளைக் குறை!
எரிபொருட்களின் விலையேற்றத்தால் அவதியுறும் மக்களைப் பாதுகாக்க, அவற்றின் விலைகளை உடனடியாகக் குறை!
விவசாயிகளின் உரத் தடை நெருக்கடிக்கு விரைவாகத் தீர்வை வழங்கு!
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை விஞ்ஞான பூர்வமாக முன்னெடு!
கொரோனாவின் திரை மறைவில் மக்களை வதைக்காதே!
சமுத்திர சூழல் மாசுபடுத்தப்பட்டுக் கடல் வளம் நாசமாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்து!
பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு போதிய நஸ்டஈடு வழங்கு!
இந்திய இழுவைமடி ரோலர் படகுகளின் சட்டவிரோத மீன்பிடி அத்துமீறலைத் தடுத்து நிறுத்து!
கொரோனாத் தடுப்பு மருந்து பாரபட்சமின்றி அனைவருக்கும் கிடைக்க வழி ஏற்படுத்து!
பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு பாடசாலைகளை மீள ஆரம்பிக்க ஆவன செய்!
உயர் கல்வியைத் தனியார் மயப்படுத்தி, ஏழைகளின் கல்வி உரிமையை மறுக்காதே!
அரசியல் கைதிகள் அனைவரையும் அரசியல் தீர்மானத்தின் மூலம் உடனடியாக விடுதலை செய்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்!
நில, நீர் ஆக்கிரமிப்புகளை நிறுத்து!
மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பறிக்காதே!
அதிகாரப் பகிர்வை மேற்கொள்!
சுயநிர்ணய உரிமை அடிப்படையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்!
எமது நாட்டின் வளங்களை விலைகூறி விற்காதே!
அந்நிய வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டிக்கு இடமளிக்காதே!
ஆகிய மக்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இடம்பெறவுள்ள இப் போராட்டத்தில் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு இதன் ஏற்பாட்டாளர்களுள் ஒருவரான புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வட பிராந்திய செயலாளரும், வலி. கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினருமான தோழர் செல்வம் கதிர்காமநாதன் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.
Post a Comment