இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் ய்ழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை 10 மணி தொடக்கம் 11 மணிவரையான ஒரு மணி நேரம் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் சட்டவிரோத கைது, கல்வியில் இராணுவமயமாக்கல், கல்வியை தனியார் மயப்படுத்தல், அடக்குமுறைகளை நிறுத்து, தனிமைப்படுத்தல் சட்டத்தை அடக்கு முறைகளுக்கு பாவிக்காதே,
அடக்குமுறைகளுக்கு அடாவடிகளுக்கு ஆயுதத்திற்கு, கைதுகளுக்கு ஆசிரியர் நாங்கள் அடிபணிய மாட்டோம், இலவச கல்வியில் இராணுவம் எதற்கு, கொத்தலாவ சட்ட மூலத்தை கிழித்தெறி, இலவசக் கல்வியை வியாபாரமாக்காதே உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோசங்களை எழுப்பினர்,
மேலும் இந்த அரசின் அடக்குமுறை மற்றும் சர்வாதிகார போக்குக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரண்டு தமது எதிர்ப்பை வெளியிட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஆசிரியர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment