யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அனைத்துப் பிரதேசங்களிலும் சிறப்பு அதிரடிப் படையினர், இராணுவத்தினரின் உதவியுடன் சிறப்பு பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், பொலிஸ் காவலரங்களையும் அதிகரிக்குமாறு சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அண்மைய நாள்களாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வீடுகளுக்குள் அத்துமீறும் வாள்வெட்டுக் கும்பங்கள் அங்குள்ளோரை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகேயிடம் வினவிய போது,
“வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் சிறப்பு விசாரணைகளை முன்னெடுக்கப்படுகின்றன. வன்முறையில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள்.
அனைத்துப் பிரதேசங்களிலும் சிறப்பு அதிரடிப் படையினர், இராணுவத்தினரின் உதவியுடன் சிறப்பு பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பொலிஸ் காவலரண்களை அதிகரிக்குமாறும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்குப் பணித்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
அத்துடன், சில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவை தொடர்பில் விசாரணைகளை இடம்பெறுகின்றன.
பொதுமகன் ஒருவர் தனது முறைப்பாட்டை ஏற்க பொலிஸ் நிலையத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்டமை தொடர்பில் எனது வட்ஸ்அப் இலக்கத்துக்கு தகவல் அனுப்பியிருந்தார். அவரது முறைப்பாட்டை ஏற்க மறுத்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
அத்துடன், முறைப்பாட்டாளர்கள் பலரது முறைப்பாடுகள் தேங்கிக் கிடைக்கின்றன. அவை தொடர்பில் எனது கண்காணிப்பின் கீழ் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனவே பொதுமக்கள் வன்முறைச் சம்பவங்கள், பொலிஸ் அலுவலகர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் எனது 0718592200 என்ற வட்ஸ்அப் எண்ணுக்கு தகவல்களை வழங்கினால் உடனடி நடவடிக்கைக்கு அறிவுறுத்தல் வழங்குவேன்” என்றும் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே தெரிவித்தார்.-
Post a Comment