இது எனக்கு மறுபிறவி” – ரெட்கார்டு நீக்கப்பட்டதற்கு வடிவேலு மகிழ்ச்சி - Yarl Voice இது எனக்கு மறுபிறவி” – ரெட்கார்டு நீக்கப்பட்டதற்கு வடிவேலு மகிழ்ச்சி - Yarl Voice

இது எனக்கு மறுபிறவி” – ரெட்கார்டு நீக்கப்பட்டதற்கு வடிவேலு மகிழ்ச்சி




சினிமாவில் நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட்கார்டு தடையை நீக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் இது எனக்கு மறுபிறவி எனவும் நடிகர் வடிவேலு தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய வடிவேலு, “தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் எனது ரசிகர் மன்றம், அவர்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி. சுராஜ் இயக்கும் ‘நாய் சேகர்’ படத்தில் செப்டம்பர் மாதம் முதல் நடிக்கவுள்ளேன். இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்துவிட்டு, பின்னர் காமெடியனாகவும் நடிக்க உள்ளேன்” என தெரிவித்தார்.

முன்னதாக, சிம்புதேவன் வடிவேலு கூட்டணியில் வெளியான இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றியடைந்தது. மேலும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான அந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.

 இதையடுத்து 10 ஆண்டுகள் கழித்து இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகத்தை, இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற தலைப்பில் உருவாக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்தப் படத்தை இயக்குனர் ஷங்கர், லைகா நிறுவத்திற்கு முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து கொடுப்பதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. 

அதையடுத்து இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் சில நாட்களிலேயே நடிகர் வடிவேலுக்கு படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படப்பிடிப்பிற்கு அவர் செல்லவில்லை. இதனால் பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்ட அரங்கால் தயாரிப்பாளர் ஷங்கருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது இயக்குனர் ஷங்கர் புகார் அளித்திருந்தார்.

 இதற்கான பேச்சுவார்த்தை நான்கு ஆண்டுகளாக நடைபெற்றது. வடிவேலு நஷ்டத்தை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் மறைமுக தடை விதித்திருந்தது. இதனால் நடிகர் வடிவேலு புதிய திரைப்படங்களில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்திற்கு பதிலாக புதிய திரைப்படத்தில் லைகா நிறுவனத்திற்கு நடித்துக் கொடுப்பதாக வடிவேலு ஒப்புக்கொண்டார்.  இதன் காரணமாக இயக்குனர் ஷங்கர் தன்னுடைய புகாரை வாபஸ் பெற்றார். 

 இதனால் இம்சை அரசன் 24-ம் புலிகேசி பட பிரச்சனை 4 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது. மேலும் விரைவில் நடிகர் வடிவேலு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை தலைநகரம், மருதமலை,  படிக்காதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய சுராஜ் இயக்கவுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post