தாக்கிய படையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் -பொன்னாலை மக்கள் கோரிக்கை- - Yarl Voice தாக்கிய படையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் -பொன்னாலை மக்கள் கோரிக்கை- - Yarl Voice

தாக்கிய படையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் -பொன்னாலை மக்கள் கோரிக்கை-



பொன்னாலை மேற்கில், மக்களின் வீடுகளுக்குள் புகுந்து படையினர் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதல் மற்றும் மக்களை அச்சுறுத்தியமை தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இன்று (17) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) நள்ளிரவு 12 மணியளவில் பொன்னாலை மேற்கு பிரதேசத்திற்குள் பட்டா வாகனம் மற்றும் யுஹ12525 இலக்க மோட்டார் சைக்கிள் என்பவற்றில் நுழைந்த படையினர் வீதியில் ஒளிர்ந்துகொண்டிருந்த மின்குமிழ்களை அணைத்துவிட்டு மக்களை மோசமாக அச்சுறுத்தினர். வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் நடத்தினர். இளைஞர்களை துரத்தி துரத்தி தாக்கினர்.

படையினரின் மூர்க்கத்தனமான செயற்பாட்டால் அச்சமடைந்த இளைஞர்கள் ஊரை விட்டு தப்பியோடினர். பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வயல்களுக்குள் தஞ்சடைந்தனர். சில மணிநேரம் அங்கு பதட்டமான சூழல் நிலவியது.

இந்நிலையில், வலி.மேற்கு பிரதேச சபையின் பொன்னாலை வட்டார உறுப்பினர் ந.பொன்ராசாவுக்கு  பொதுமக்கள் தகவல் வழங்கியதை அடுத்து உடனடியாகவே சம்பவ இடத்திற்கு சென்ற அவர் படையினரின் செயற்பாடுகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

நள்ளிரவு நேரம் மக்களை தாக்கிய படையினரின் செயற்பாடு குறித்து படையினருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட அவர் பொலிஸாருக்கு அழைப்பு எடுத்து அவர்களை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்திருந்தார்.

பொலிஸார் வந்தால் சிக்கல் நிலை உருவாகும் என உணர்ந்த படையினர் உடனடியாகவே அங்கிருந்து வெளியேறினர். பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயம் வரை ஓடிச்சென்ற படையினர் அங்கு தயாராக நின்ற வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றனர்.

படையினர் தம்மைத் தாக்கியமை தொடர்பாக நள்ளிரவு 11.55 மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்திருந்த போதிலும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகைதரவில்லை எனவும் பின்னர் 119 இற்கு அறிவித்தமையால் அதிகாலை 2.00 மணிக்கு வந்து விசாரணை நடத்தினர் எனவும் மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, சம்பவ தினம் பிற்பகல் வேளை பொன்னாலை சவாரித்திடலில் இடம்பெற்ற மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் பொன்னாலை மற்றும் கோட்டைக்காடு இளைஞர்கள் சிலர் காயமடைந்தனர் எனவும் இச்சம்பவத்தின் தொடர்ச்சியாகவே படையினர் மக்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post