அக்டோபரில் மூன்றாம் அலை உச்சம் தொடும் எனவும் அதனை சமாளிக்க மருத்துவ வசதிகள் போதுமானதாக இல்லை என்று பிரதமர் அலுவலகத்தில் நிபுணர்கள் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஆண்டின் தொடக்க காலம் முதல் கொரோனா எனும் கொடிய வைரஸ் நோய் தொற்று பரவி வந்தது.
கடந்த ஆண்டு கோடிக்கணக்கானோரை பாதித்து பின்னர் கட்டுக்குள் வந்த இந்த நோய்த்தொற்று, இந்த ஆண்டு ஏப்ரல் முதல் 2ம் அலை பரவலாக உருவெடுத்து கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது.
முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது நோய்ப்பரவல் கட்டுக்குள் வந்திருக்கிறது. ஆனாலும் 3ம் அலை பரவல் குறித்த கணிப்புகள் வெளியாகி பொதுமக்களை பீதிக்கு ஆளாக்கியுள்ளது.
இந்நிலையில் 3ம் அலை பரவல் குறித்து நிபுணர்கள் குழு மத்திய அரசிடம் சமர்ப்பித்திருக்கும் அறிக்கை ஒன்று குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
கொரோனா பரவல் தொடர்பாக உள்துறையின் வழிகாட்டுதல்படி தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தின் கீழ், நிதி ஆயோக் உறுப்பினரான வி.கே.பால் தலைமையில் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழு கடந்த மாதம் பிரதமர் அலுவலகத்தில் மூன்றாம் அலை பரவல் குறித்த அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருக்கிறது. அந்த அறிக்கையின்படி மூன்றாம் அலை பரவல் வரும் அக்டோபரில் உச்சம் தொடும் என கூறப்பட்டுள்ளது.
மூன்றாம் அலை பரவல் குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் என எச்சரிக்கை வெளியான நிலையில் இந்தியாவில் குழந்தை மருத்துவத்துவத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், வெண்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவ வசதிகள் தேவைப்படும் அளவிற்கு அருகில் கூட இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வைரஸால் பாதிக்கப்படும் ஒவ்வொரு 100 நபர்களில் 23 பேருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவை என்ற அடிப்படையில் நிபுணர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment