சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், கொரோனா கட்டுப்பாட்டிற்கான இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை (30) ஆரம்பமாகவுள்ள நிலையில், தமக்கான தடுப்பூசியை பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் வைத்து ஏற்றுமாறு பொன்னாலை ஜே-170 கிராம சேவையாளர் பிரிவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொன்னாலை பொதுச் சுகாதார பரிசோதகரிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தமக்கான முதலாவது தடுப்பூசி மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் வைத்து ஏற்றப்பட்டது. இரண்டாவது தடுப்பூசி எதிர்வரும் 31 ஆம் திகதி அங்கு ஏற்றப்படும் எனவும் தங்களை அங்கு வருமாறும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆனால், வயதானவர்கள் அங்கு செல்வதற்கு தற்போது போக்குவரத்து வசதி இல்லை. மேலும், கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில் அச்சமான நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடத்து மக்களும் ஒரே இடத்தில் ஒன்றுகூடுவது கொரோனா பரவுதலுக்கு வழிவகுக்கும்.
இந்த நிலைமைகளைக் கருத்தில்கொண்டு தங்களுக்கு பொன்னாலையில் வைத்து தடுப்பூசி ஏற்றுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக சங்கானை சுகாதார வைத்திய அதிகாரியிடம் கேட்டபோது,
மூளாய் மற்றும் பொன்னாலை மக்களுக்கு மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் நேர ஒழுங்கின் அடிப்படையில் தடுப்பூசி ஏற்றுவதற்கு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது, வரக்கூடியவர்கள் அங்கு வந்து ஏற்றிக்கொள்ளலாம், வர முடியாதவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும். – என்றார்.
Post a Comment