அரசாங்கத்திற்கு எதிரான சர்வதேச சதியில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளிற்கு தொடர்புள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.
நாட்டை மூன்றுவாரங்களிற்கு முடக்குமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பத்து கட்சிகள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியதை அரசாங்கத்திற்கு எதிரான சர்வதேச சதியின் ஒரு பகுதியாக பார்க்கவேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் மத்தியிலான சந்திப்பில் முடக்கல் நிலையை அறிவிப்பது இல்லை என தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னரே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இந்த கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தன என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது எவ்வாறான சதி என்பது எங்களிற்கு தெரியாது இவ்வாறான விடயம் இடம்பெறுவது இதுவே முதல் தடவையில்லை என்பதால் ஜனாதிபதி இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட பின்னர் அதற்கு எதிராக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவது அரசாங்கத்தை நெருக்கடியான நிலைமைக்குள் தள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும்,
ஜனாதிபதிக்கும் ஊடகங்களிற்கும் கடிதம் எழுதுவதற்கு பதில் அவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சாகரகாரியவசம் இவ்வாறான நடவடிக்கைகளிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களை தவிர்க்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment