இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட சீனியில் பலகோடி ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டதாக கூறப்பாடும் நிலையில் அரச உத்தியோகத்தர்களிடம் அரை மாத சம்பளத்தை தரும்படி அரசு கேட்பது வேடிக்கையாக உள்ளதென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ் சாட்டினார்.
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெற்ற மோசடி வர்த்தகத்தில் சீனி இறக்குமதி மோசடி கருதப்படுகிறது.
சீனிக்கான இறக்குமதி வரியை நீக்கி மக்களுக்கு சலுகை வழங்குவதாக கூறிய அரசாங்கம் நிவாரணத்தை மக்களுக்கு வழங்காமல் தமக்கு இசைந்த வர்த்தகர்களுக்கு சீனி வர்த்தகத்தில் பாரிய இலாபத்தை பெற வைத்தார்கள்.
குறித்த வர்த்தகம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்த போதும் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து எவ்விதமான நிதியும் அற விடப்படப்படவில்லை.
இவ்வாறான நிலையில் தற்போது கோவை நிவாரண நிதிக்காக அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தின் அரைவாசியை கேட்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
தற்போதைய கொரோனா சூழ்நிலையை அரசானது உரிய செயற்றிட்டங்கள் இன்றி கையாள நினைத்தமையால் தற்போது நாடு பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது.
சுகாதார தரப்பினர் மற்றும் புத்திஜீவிகளின் கருத்துக்களை செவிமடுக்காது காலத்தை கடத்திய ஆட்சியாளர்கள் தற்போது கண்டி மகா நாயக்கர்களின் கோரிக்கையை அடுத்து நாட்டை முடக்குவதற்கு முன்வந்தனர்.
பத்து நாட்கள் முடக்கத்தை அறிவித்த நிலையில் கடந்த முறையும் 5000 ரூபா கொடுப்பனவு உரிய முறையில் கிடைக்காத நிலையில் தற்போது 2000 ரூபா வழங்கப்படும் என கூறுவது நகைப்புக்குரிய விடயமாகும்.
10 நாட்களில் பொது முடக்கத்தை அறிவித்துவிட்டு 2000 ரூபாயை வழங்குவது ஒரு குடும்பத்துக்கு எத்தனை நாட்களுக்கு போதுமானது என்ற கேள்வி எழுகின்றது.
ஆகவே நாடு தற்போது கொவிட் சூழலால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பொருளாதார ரீதியில் மக்களுக்கு பாரிய நெருக்கடி நிலைமையை ஏற்படுத்தியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment