நான் எனது ஆப்கான் சகோதரிகளின் நிலை குறித்து அச்சமடைந்துள்ளேன் என நோபல் பரிசுபெற்ற மலாலா யூசுப்சாய் தெரிவித்துள்ளார்.
நியுயோர்க் டைம்சில் எழுதியுள்ள கட்டுரரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராணுவத்தின் 20 வருடகால நடவடிக்கையின் பின்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டை தலிபான் மீண்டும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள நிலையிலேயே மலாலா தனது அச்சத்தை வெளியிட்டுள்ளார்.கடந்த இரண்டு தசாப்தகாலமாக மில்லியன் கணக்கான ஆப்கான் பெண்களும் சிறுமிகளும் கல்விக்கான வாய்ப்பை பெற்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் அவர்களிற்கு உறுதி அளிக்கப்பட்ட எதிர்காலம் தற்போது மெல்ல கைநழுவுகின்றது என nதிவித்துள்ளார்.
20 வருடத்திற்கு முன்னர் ஆட்சியிலிருந்த வேளை பெண்களும் சிறுமிகளும் பாடசாலைக்கு செல்வதை தடுத்தனர் தமது உத்தரவை மீறியவர்களிற்கு கடும் தண்டனை வழங்கினார்கள் என தெரிவித்துள்ள மலாலா அவர்கள்மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்,பல பெண்களை போல நான் எனது ஆப்கான் சகோதரிகளின் நிலை குறித்து அச்சமடைகின்றேன் எனவும் எழுதியுள்ளார்.
எனது குழந்தை பருவத்தினை என்னால் நினைத்து பார்க்காமல் இருக்க முடியாது, 2007 இல் பாக்கிஸ்தானின் ஸவாட் பள்ளத்தாக்கில் உள்ள எனது ஊரை தலிபான்கள் கைப்பற்றினார்கள் அதன் பின்னர் சிறுமிகள் யுவதிகள் பாடசாலைகளிற்கு செல்வதற்கு தடை விதித்தார்கள் என மலாலா எழுதியுள்ளார்.
நான் எனது நீண்ட பெரிய சோலிற்கு மத்தியில் எனது பாடப்புத்தகங்களை மறைத்துவைத்துக்கொண்டு மிகுந்த அச்சத்துடன் பாடசாலைக்கு சென்றேன் என அவர் நியுயோர்க் டைம்சில் எழுதியுள்ளார்.
ஐந்து வருடங்களின் பின்னர் எனது 15 வயதில் பாடசாலைக்கு செல்வதற்கான எனது உரிமை குறித்து குரல் எழுப்பியமைக்காக தலிபான்கள் என்னை கொலை செய்ய முயன்றனர் என அவர் எழுதியுள்ளார்.
கடந்த இரண்டு தசாப்தத்தில் மில்லியன் கணக்கான ஆப்கான் பெண்களும் சிறுமிகளும் கல்விக்கான வாய்ப்பை பெற்றுள்ளனர் என எழுதியுள்ள அவர் தற்போது அவர்களிற்கு வாக்குறுதியளிக்கப்பட்ட எதிர்காலம் கைநழுவிபோகின்றது என தெரிவித்துள்ளார்.
ஆப்கான் யுத்தத்தில் என்ன தவறு இடம்பெற்றது என விவாதிப்பதற்கு எங்களிற்கு போதிய காலஅவகாசம் உள்ளது என எழுதியுள்ள அவர்இது மிகவும் முக்கியமான தருணம் நாங்கள் ஆப்கான் பெண்கள் யுவதிகளின் குரல்களை செவிமடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அவர்கள் பாதுகாப்பு –கல்வி- எதிர்காலம் ஆகியவற்றை கோருகின்றனர் நாங்கள் அவர்களை கைவிடமுடியாது எங்களிற்கு போதிய கால அவகாசமில்லை என அவர் எழுதியுள்ளார்.
வழமைக்கு மாறாக இம்முறை தலிபான் நாட்டில் பெண்களின் உரிமையை மதிப்போம் என தெரிவித்துள்ளது.
எனினும் நியுயோர்க் டைம்ஸ் கட்டுரையில் இது குறித்து அவநம்பிக்கை வெளியிட்டுள்ள மலாலா பெண்களின் உரிமைகளை வன்முறையை பயன்படுத்தி தலிபான்கள் ஒடுக்குவதும் ஆப்கான் பெண்களின் அச்சங்களும் உண்மையானவை என எழுதியுள்ளார்.
பல்கலைகழங்களில் இருந்து பெண்கள் திருப்பி அனுப்பப்படுவது குறித்தும் அலுவலகங்களில் இருந்து பெண் ஊழியர்கள் திருப்பி அனுப்பப்படுவது குறித்தும் நாங்கள் கேள்விப்படுகின்றோம் என மலாலா எழுதியுள்ளார்.
Post a Comment