நாடு முழுவதுமாக கொரோனா பேரலையில் சிக்கியிருக்க வடமாகாணசபை அதிகாரிகளோ பணியாளர்களை இடமாற்றத்தின் கீழ் பந்தாடத்தொடங்கியிருப்பதாக இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு முறையிடப்பட்டுள்ளது.
குறிப்பாக தற்போது முன்களப் பணியாளர்களாக செயற்பட்டுவரும் சுகாதார சேவைகள் திணைக்கள சாரதிகள் முதல் உள்ளுராட்சி மன்ற பணியாளர்கள் வரையாக இடமாற்றத்தினை அரங்கேற்ற வடமாகாணசபை அதிகாரிகளில் ஒரு சாரார் முன்னின்று செயற்பட்டுவருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக வடமாகாணசபையில் பணியிலுள்ள அதிகாரிகள் பலரும் பத்து முதல் 25 வருடங்கள் வரையில் வடமாகாணசபையிலோ அல்லது யாழ்ப்பாணத்திலோ காலமோட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய சூழலில் தங்கள் கதிரைகளை தக்க வைத்தவாறே உத்தியோகத்தர்களை இடமாற்றமென பந்தாடுவதாக தொழிற்சங்கங்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளன.
அதிலும் சில அதிகாரிகள் அதே பதவியில் 13வருடங்கள் வரை பணியாற்றுவது தொடர்பாகவும், இன்னும் சிலரோ யாழ்ப்பாணத்திலேயே 25வருடங்களிற்கு மேல் ஒட்டிக்கொண்டிருப்பது தொடர்பிலும் பட்டியல் பிரகாரம் விபரங்களை அனுப்பி தொழிற்சங்கங்கள் அனுப்பி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போதைய கொரோனா பெருந்தொற்றினில் முக்கிய பணிகளை ஆற்றிவருபவர்களாக வடமாகாண சுகாதார அமைச்சு மற்றும் திணைக்களமும் அதன் கீழுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மற்றும் வைத்தியசாலைகளுமே உள்ளன.
அதே போல உள்ளுராட்சி திணைக்களத்தின் கீழுள்ள உள்ளுராட்சி மன்றங்களும் நெருக்கடி நிலையில் தமது கடமைகளை ஆற்றிவருகின்றன.
இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று மற்றும் அதனால் அதிகரித்துவரும் மரணங்கள் பற்றி கண்டுகொள்ளாது உத்தியோகத்தர்களையும் சாரதிகளையும் இடமாற்றத்தினில் செல்ல வடமாகாணசபை அதிகாரிகள் நிர்ப்பந்தித்துவருகின்றனர்.
தற்போதைய பெருந்தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க பணியாற்றுவதா அல்லது இடமாற்றம் பெற்று செல்வதாவென்ற கேள்விக்கு அனைவரும் தள்ளப்பட்டுள்ளதாக ஊழியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக நோயாளர் காவுவண்டி சாரதிகள் மிக முக்கிய பணிகளை ஆற்றிவருகின்ற சூழலில் திட்டமிட்டு அவர்களையும் இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்க அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டிலும் சாரதிகளை இடமாற்றம் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிசுபிசுத்துப்போயுள்ள நிலையில் தற்போதைய பெருந்தொற்றினை புறந்தள்ளி இடமாற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டது எவ்வாறு என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக ஆளுநரது அனுமதியுடனேயே இடமாற்றத்தை முன்னெடுப்பதாக அறிவித்துள்ள நிலையில் இதன் உண்மையினை வெளிப்படுத்த தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன.
Post a Comment