ஆப்கானிஸ்தானின் கடைசி மாகாணமான பஞ்ச்ஷிர் பகுதியை கைப்பற்றியதாக தலிபான்கள் கூறியதை மறுத்து, ‘தலிபானுக்கு எதிரான போராட்டம் தொடரும்’ என்று ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணி (NRF) தெரிவித்துள்ளது. இதனால் பஞ்ச்ஷிரில் குழப்பமான சூழல் நிலவுகிறது.
பணிந்ததா சிம்ம சொப்பனமான பஞ்ச்ஷிர்?
34 மாகாணங்களை கொண்ட ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 33 மாகாணங்களை கைப்பற்றி விட்டனர். ஆனால் ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பஞ்ச்ஷிர் மாகாணம், தேசிய எதிர்ப்பு முன்னணி என்ற அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை அமைக்க தலிபான்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில் அவர்களுக்கு தலைவலியாக இருக்கிறது பஞ்ச்ஷிர் மாகாணம். இவர்கள் எப்போதும் யாரிடமும் அடிபணிந்தது கிடையாது என்று கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற தலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தேசிய எதிர்ப்பு முன்னணி அமைப்பினருடன் ஏற்பட்ட மோதலில் 600 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது.
இந்த நிலையில், தலிபான்களின் தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து தேசிய எதிர்ப்புப் படையினர் பணிந்துள்ளனர் என்றும், பஞ்ச்ஷிர் மாகாணத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் தலிபான்களுக்கு தேசிய எதிர்ப்பு முன்னணி அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியானது.
இது தொடர்பாக பேசிய தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித், "நாட்டில் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சமீபத்திய முயற்சிகள் முடிவுகளை கொண்டு வந்துள்ளன. பஞ்ச்ஷிர் மாகாணம் இஸ்லாமிய எமிரேட்டின் (தலிபான்கள் பயன்படுத்தும் பெயர்) முழு கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் போர் முடிந்துவிட்டது, அடுத்த சில நாட்களில் புதிய அரசு அமைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகும். இந்த வெற்றியின் மூலம், நமது நாடு போரின் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து முழுமையாக வெளியேற்றப்பட்டது" என்று கூறினார்.
தலிபான்களின் வெற்றியை மறுத்த பஞ்ச்ஷிர்:
பஞ்ச்ஷிரை வெற்றிகொண்டுவிட்டோம் என்ற தலிபான்களின் அறிவிப்பினை மறுத்து பதிலளித்துள்ள NRF செய்தித் தொடர்பாளர் அலி நாசரி, “என் தலைவரும், சகோதரருமான ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணி (NRF) தலைவர் அஹ்மத் மசூத் பாதுகாப்பாக உள்ளார், விரைவில் அவர் இது தொடர்பான ஒரு அறிக்கையை வெளியிடுவார்” என்று தெரிவித்தார்.
மேலும், தலிபான்களுடனான சண்டையைத் தொடர பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கு முழுவதும் உள்ள அனைத்து முக்கியமான நிலைகளிலும் எதிர்ப்புப் படைகள் தயாராக இருப்பதாக என்.ஆர்.எஃப் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணியின் பெயரில் வெளியான ட்வீட்டில், "பஞ்ச்ஷிரை கைப்பற்றியதாக கூறும் தலிபான்களின் கூற்று தவறானது.
என்ஆர்எஃப் படைகள் பள்ளத்தாக்கு முழுவதும் அனைத்து முக்கிய நிலைகளிலும் உள்ளன. மக்களுக்கான நீதி மற்றும் சுதந்திரம் நிலவும் வரை தலிபான்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளுடனான சண்டையைத் தொடர ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்” எனத் தெரிவித்தார்
தலிபான்களின் வெற்றியை ருசிக்கவிடாத பஞ்ச்ஷிர்:
கடந்த ஆகஸ்ட் 15 அன்று தலிபான்களிடம் காபூல் உட்பட ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் வீழ்ச்சியடைந்த பிறகும் அவர்களால் ஆட்சியமைக்க முடியவில்லை, அதற்கு காரணம் பஞ்ச்ஷிரும்தான்.
மறைந்த முன்னாள் ஆப்கானிஸ்தான் கொரில்லா கமாண்டர் அஹ்மத் ஷா மசூத்தின் மகன் அஹமத் மசூத் தலைமையிலான பஞ்ச்ஷிர் மாகாணம், தலிபான்களுடன் சண்டையிட தயாராகவே இருந்தது.
இந்த சூழலில் கடந்த நான்கு நாட்களில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் முற்றியது, இதனால் இரு தரப்பினரும் பெரும் இழப்புகளை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
பஞ்ச்ஷிர் ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு முன்னணியின் தலைவர் அஹ்மத் மசூத் மற்றும் ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலேஹ் ஆகியோர் தொடர்ந்து தலிபான்களை எதிர்த்து வந்தனர்.
அம்ருல்லா சலேஹ் தன்னை ஆப்கானிஸ்தானில் தற்காலிக ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்டார். தலிபான்கள் தங்கள் மாகாணத்தை கைவிட்டால் சண்டையை நிறுத்தவும், பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருப்பதாக மசூத் ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார்.
பிரபல சோவியத் எதிர்ப்பு மற்றும் தலிபான் எதிர்ப்பு தளபதியான அஹ்மத் ஷா மசூத்தின் மகன் அஹ்மத் மசூத்துக்கு விசுவாசமான போராளிகள் மற்றும் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்குக்கில் பதுங்கியுள்ள ஆப்கானிஸ்தான் இராணுவ வீரர்களின் தொடர் போராட்டம்தான்,
33 மாகாணங்களில் வெற்றிகொண்டும் மூன்று வாரங்களுக்கு மேலாக புதிய ஆட்சியை இறுதி செய்யவிடாமல் தடுக்கிறது. இப்போதும் தலிபான்களும், பஞ்ச்ஷிரும் ‘போர் முடிவு’ குறித்து குழப்பமான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்
Post a Comment