திரெளபதி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் தான் ருத்ர தாண்டவம். இப்படம் வெளிவரும் முன்பே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.
ருத்ர தாண்டவம் படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் பாஜக நிர்வாகி ஹெச். ராஜா, புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி உள்ளிட்டோருக்கு திரையிட்டு காட்டப்பட்டது.
படம் பார்த்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஹெச்.ராஜா, “சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல.
மக்களுக்கு பல உண்மைகளை புரிய செய்து நல்வழிப்படுத்தும் சரியான முயற்சி. போதையால் வாழ்க்கையை இழந்து வரும் இளைஞர்களுக்கு இது ஒரு படம் அல்ல பாடம்” என கூறினார்.
மேலும், “ருத்ர தாண்டவம் படம் திரௌபதி படத்தை போல பல மடங்கு வரவேற்பை பெறும். படத்தில் யாரையும் இழிவுபடுத்தவில்லை.
ஆனால் சரக்கு மிடுக்கு பேச்சின் மூலம் சாதாரண சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஜாதி பிரச்சனையாக மாற்றுபவர்களை இந்த படம் எச்சரித்திருக்கிறது.
சட்ட பிரச்சனையை ஜாதி பிரச்சனையாக மாற்றுவதை ஊடகவியலாளர்கள் டிஆர்பிக்காக காட்டுவதை இப்படத்தில் லேசாக கோடிட்டு காட்டியிருக்கிறார்கள்” என கூறியுள்ளார்.
இவரை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, “இந்த படத்தின் முக்கிய கரு என்றால் போதை வஸ்துகளால் இளைஞர்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள்.
போதை பழக்கத்திற்கு அடிமையாவதால் எந்த அளவிற்கு குடும்பம் மற்றும் சமுதாயம் பாதிக்கப்படுகிறது என்பதை மையப்படுத்தி இப்படத்தை எடுத்துள்ளார்கள். எனவே இதை படமாக பார்க்கமால் பாடமாக பார்த்தால் சிறப்பாக இருக்கும்” என கூறியுள்ளார்.
மேலும், “பிசிஆர் சட்டம் (Protection of Civil Rights) குறித்தும், கட்டாய மதமாற்றம் குறித்தும் படத்தில் தெளிவாக கூறியுள்ளார்கள். போதையை ஒழிக்க வேண்டும் என்பதே படத்தின் முக்கிய கருத்தாக உள்ளது.
எனவே இளைஞர்கள் இதை ஒரு பாடமாக எடுத்து கொள்ள வேண்டும். படம் மிக சிறப்பாக உள்ளது. அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள். படக்குழுவினருக்கு எனது பாராட்டுக்கள் ” என கூறியுள்ளார்.
Post a Comment