ஜெய் பீம் படத்தில் வரும் ஒற்றை காட்சி மொத்த வடஇந்தியாவையும் உலுக்கி உள்ளது. இணையம் முழுக்க இதை பற்றிய விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த காட்சி ஏன் விவாதம் ஆனது... ஏன் இந்த காட்சி முக்கியத்துவம் பெற்றது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தமிழ் சினிமா உலகில் இன்னொரு மகுடமாக வந்திருக்கிறது ஜெய் பீம் படம். பொதுவாக மக்கள் போராட்டங்களை பேசும் படங்கள், பிரச்சார நெடி வீசும் படங்களாக இருக்கும்.. விறுவிறுப்பாக இருக்காது என்று நிறைய விமர்சனங்கள் வைக்கப்படுவது உண்டு.
j
அந்த "பிரச்சார நெடி" விமர்சனத்தை அசுரன், கர்ணன் போன்ற படங்கள் அடித்து உடைத்தன. இப்போது அதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறது தா. செ. ஞானவேல் இயக்கிய ஜெய் பீம். மக்கள் பிரச்சனை + கமர்ஷியல் என்று கலந்து கட்டிய கலவையாக அமேசான் பிரைமில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது.
இந்த படத்தின் முதல் காட்சியே தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத.. வைக்கப்படாத காட்சி.. நீ என்ன ஜாதி என்று சிறையில் இருந்து வெளியே வருபவர்களை போலீசார் கேட்பது போல அமைக்கப்பட்டு உள்ள இந்த காட்சியில் வெளிப்படையாக ஜாதி பெயர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இருளர்கள், தாழ்த்தப்பட்டவர்களை மட்டும் மீண்டும் பொய் கேஸில் கைது செய்வது போல காட்சி விரிவடையும் நிலையில்தான் படம் கதைக்குள் நகர்கிறது.
பொய் கேசில் சிறைக்கு செல்லும் ராஜாக்கண்ணுவிற்கு என்ன நடக்கிறது.. என்ற ஒற்றை புள்ளிதான் படத்தின் கதை. இருளர்கள் உள்ளிட்ட பழங்குடி மக்களும், தாழ்த்தப்பட்டவர்களும் எதிர்கொள்ளும் அதிகார அழுத்தம், இன்னல்கள், போலீஸ் டார்ச்சர், சட்ட போராட்டம், உரிமைக்கான குரல் என்று பல விஷயங்களை ஜெய் பீம் அதிரடியாக பேசுகிறது. முதல் நொடியில் இருந்தே ஒரு பதைபதைப்பு.. என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு என்று படம் பக்கா கமர்சியல் பேக்கேஜாகவும் வந்து இறங்கி உள்ளது.
வசனங்கள் அதிலும் "அவனுங்க குடிசையில் குனிஞ்சுதான் நிக்கணுமா?'' "7000 மாங்காய் இல்லை.. 7000 மனுசங்க" "ஏன் அம்பேத்கார் மட்டும் இல்லை" " எந்த ஜாதில சார் திருடன் இல்லை" என்று படத்தின் ஒவ்வொரு வசனமும் பொட்டில் அறைந்தாற் போல எழுதப்பட்டு இருக்கிறது. ஜாதி தீண்டாமை - போலீஸ் டார்ச்சர் - உரிமை போராட்டம் இதுதான் படத்தின் சராம்சம். ராஜாக்கண்ணுவிற்கு நீதி பெற்றுத்தந்த முன்னாள் நீதிபதி மற்றும் வழக்கறிஞர் சந்துருவின் நிஜ வாழ்க்கை போராட்டதை இந்த படம் கதையாக சொல்கிறது... படத்தின் மீதி ஸ்பாய்லர்களை நீங்களே அமேசானில் பார்த்துக்கொள்ளுங்கள்... இந்த படத்தின் வேறு ஒரு காட்சிதான் இணையம் முழுக்க சர்ச்சையாகி உள்ளது.
ஒரு வசனம் இந்த படம் 5 மொழியில் வெளியாகி உள்ள நிலையில்.. 4 மொழியில் வரும் ஒரு காட்சி மட்டும் தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. படத்தில் வரும் தமிழ்நாட்டில் வசிக்கும் "சேட்டு" கதாபாத்திரம் ஒன்று இந்தியில் பேசும் காட்சியில் போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ்.. அந்த வடஇந்தியரின் கன்னத்தில் அறைந்து தமிழில் பேசு என்று சொல்வார். அதிரடியாக அந்த காட்சிதான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஒரு அறை வடஇந்தியாவையே மொத்தமாக உலுக்கி உள்ளது.
தமிழ் தமிழ் தெரிந்து கொண்டு.. வேண்டுமென்றே இந்தியில் பேசும் அந்த பாத்திரத்திற்கு விழுந்த அறை மொத்த வடஇந்திய இணைய உலகை உலுக்கி உள்ளது. இந்திக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் இது. இந்தியை அவமதிக்கிறார்கள் என்று கடுமையான விமர்சனங்கள் வைத்து பல வடஇந்தியர்கள் விமர்சனம் வைத்து வருகிறார்கள். இந்தி தேசிய மொழி என்று பொய்யான கருத்தையும் தெரிவித்து பலர் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.
முக்கியமாக பிரகாஷ் ராஜின் அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக இது என்னவோ அவரே வைத்த காட்சி போல பலரும் கடும் விமர்சனங்களை வைத்து உள்ளனர். அதே சமயம் தென்னிந்தியாவில் இந்த காட்சி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகாவில் இந்த காட்சிக்கு பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இந்தி திணிப்பிற்கு எதிரான சாட்டையடி இது என்று பலரும் இந்த காட்சியை பாராட்டி உள்ளனர்.
Post a Comment