சென்னை டி.பி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, இன்று காலை, சாலையோராம் இறக்கும் தறுவாயில் மழைநீரில் மிதந்து கொண்டிருந்த ஓர் இளைஞரை மீட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு, பாராட்டப்பட்டு வருகிறது. இது குறித்து காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியிடம் பேசினோம்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. தேங்கிய தண்ணீரால் மக்கள் பலர் அடிப்படை வசதிகளுக்கே திண்டாடி வருகிறார்கள். ஆதரவற்றவர்கள், நடைபாதையில் தங்கியிருப்பவர்கள், இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
அவர்களை மீட்டெடுக்கவும், தேவையான உதவிகளைச் செய்யவும் அரசு ஒரு பக்கம் சுழன்றாலும், பொது மக்களும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை டி.பி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, இன்று காலை, சாலையோராம் இறக்கும் தறுவாயில் மழைநீரில் மிதந்து கொண்டிருந்த ஓர் இளைஞரை மீட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு, பாராட்டப்பட்டு வருகிறது.
காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி
``மழை பெய்யத் தொடங்கியதிலிருந்தே, மக்களுக்கான சாப்பாடு, ஆதரவற்றவர்களை மீட்டு காப்பகங்களில் சேர்ப்பது, உணவுப் பொட்டலங்கள் வழங்குவது போன்ற உதவிகளைச் செய்து வந்தோம்.
இன்று காலை ஷெனாய் நகர் கல்லறைக்கு அருகே, ஒருவர் இறந்துகிடப்பதாக தகவல் வந்தது. தண்ணீரில் உடல் முழுவதும் ஊறிய நிலையில் மீதந்து கொண்டிந்த அவரை மீட்டேன். சம்பந்தப்பட்ட நபர், குடிபோதையில் அங்கிருந்த மரத்தின் அடியில் படுத்திருந்திருக்கிறார். அதன்பின் சுயநினைவு இல்லாமல், தண்ணீரில் ஊறி மயக்கம் அடைந்துவிட்டார்.
உடல் விறைத்து சுய நினைவு இல்லாமல் இருந்த அவரை தண்ணீரில் இருந்து தூக்கும்போது, இறந்துவிட்டார் என்றுதான் நினைத்தேன். ஆனால், முதலுதவிகள் செய்து பார்த்தபோது, அவர் உயிருடன் இருப்பது தெரிய வந்தது.
பின் சில நொடிகூட தாமதிக்காமல், அவரை தூக்கி என் தோள்பட்டையில் வைத்துக்கொண்டு ஓடி வந்து, அங்கிருந்த ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தேன். இப்போது அவர் சிகிச்சையில் இருக்கிறார். ஓர் உயிரை காப்பாற்ற முடிந்தததை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது சமூக சேவையெல்லாம் கிடையாது, காவல் உடுப்பு அணிந்துள்ள நான் அதற்கு ஆற்றும் கடமை" என தெரிவித்தார்
Post a Comment