பிரதமரின் உத்தரவிற்கு அமைய வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் அமைக்கப்பட்ட, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் மரணம் தொடர்பிலான விசாரணைக் குழுவில் குற்றவாளிகளின் உறவினர், நண்பர்கள் இடம்பெற்று இருப்பதனால் முக்கியமான தகவல்கள் பல மறைக்கப்பட்டுள்ளதாக அவரின் சகோதரன் பிரதமர் மகிந்தராஜபக்சவுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) அனுப்பியுள்ள அவசர மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்திலே மூன்றாம் வருட மாணவனாக கல்வி கற்று வந்த மாதாகோவில் வீதி, துன்னாலை வடக்கைச் சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் அவர்கள் கடந்த 17.11.2020 அன்று அவர் வாடகைக்கு தங்கி இருந்து கல்வி கற்று வந்த வன்னியசிங்கம் வீதி, கோண்டாவில் கிழக்கில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்டு தூக்கிடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனை அப்போது கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த வீரசிங்க என்பவர் தற்கொலை என கூறி எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை.
இது தற்கொலை அல்ல கொலை என அவரின் சகோதரனால் ஜனாதிபதி,பிரதமர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர், இராணுவத்தளபதி ஆகியோருக்கு அறிவித்ததன் விளைவாக பிரதமர் மகிந்தராஜபக்ச அவர்கள் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணித்திருந்தார்.
பொலிஸ்மா அதிபரின் பணிப்பிற்கு அமைய வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதில் நாம் தெரிவித்த பல விடயங்கள் மறைக்கப்பட்டமை தற்போது தெரியவந்துள்ளது.
இதற்கு காரணம் அவ் விசாரணைக் குழுவில் கொலையாளிகளின் உறவினர், நண்பர்கள் இருக்கின்றமை தற்போது தெரியவந்துள்ளது.
எனவே அவர்களை நீக்கி விசாரணைகளை முன் கொண்டு செல்ல உதவுமாறு அவரின் சகோதரன் பிரதமர் மகிந்தராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள அவசர மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.
Post a Comment