வடக்கு, கிழக்கில் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு முன்பாக படையினர் குவிக்கப்பட்டுள்ளமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் நேற்றைய தினம் (23) பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்படி விடயம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டவுடன், மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு முன்பாக இவ்வாறு படையினரை குவித்து, மாவீரர் துயிலும் இல்லங்களை மறைப்பதன் மூலம், தமிழர்கள் அவர்களின் வீரப்புதல்வர்களை மறக்கக்கூடிய சூழ்நிலை வருமா என்றும் அல்லது சிங்களவர்கள் இதனை ஏற்றுக் கொள்கிறார்களா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
2016 – 2018 வரை மட்டுமன்றி 2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட மாவீரர் தினத்தை விளக்கேற்றி அனுஷ்டித்தார்கள் என்றும் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை என்றும் தெரிவித்த அவர், தற்போதுதான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
நாட்டில் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன என்றும் இதற்கு கொரோனா கட்டுப்பாடுகள் இல்லை ஆனால், மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு மட்டுமே கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இந்த நிலை மாற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment