இறந்த எம்மைவிட்டுப் பிரிந்த ஆத்மாக்களை நினைவுகூரும் முகமாக அமைதியாக எம், வாழுமிடங்களில், நம் இதயங்களில் நினைவுகூர்ந்து விளக்கேற்றி ஆத்ம கடன் நிறைவேற்றுமாறு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சோ சேனாதிராஜா தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பாக அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது....
இலங்கை அரசு இறந்தவர்கள் ஆத்மாக்களை நினைவுகூருவதைத் தடைசெய்வது போர்களத்தைவிட தமிழ்பேசும் மக்கள் நெஞ்சில் ரணகளத்தை எரியவிடுவதாகவே இருக்கிறது.
மனிதகுலத்தின் பாரம்பரிய மாண்புகளையும் அரசு அழித்தொழிக்கிறது.
இலங்கையில் கடந்த 70ஆண்டுகட்கு மேலான வரலாற்றுக்காலத்தில் மக்களும் தமிழ் நிலமும் இனக்கலவரங்களாலும், இனவிடுதலைக்கான போர்களத்திலும் இலட்சக்கணக்கான உயிர்கள் பலிகொடுக்கப்பட்டு ஆறாத ரணகளத்தில் மூழ்கிக்கிடக்கும் மனிதகுல வரலாற்றில் கறைபடிந்து கிடக்கும் நிலைமையை அனுபவித்து வருகிறோம்.
இறந்தவர்கள் ஆத்ம சாந்திக்காக அந்த ஆத்மாக்களை நினைவுகூர்ந்து பிரார்த்திக்கும், கண்ணீர்விட்டு கலந்து ஆறுதலடையும் நாட்களில் தெரிந்து அஞ்சலிப்பதும் உலக மனிதகுல நாகரீகம். இதனால் அந்த ஆத்மாக்களின் உறவுகளும், மனிதநேயம் கொண்டவர்களும் நினைவு கூருவதனால் ஆறுதல் பெறுகிறோம்.
இதனை நாகரீக உலகம் ஏற்றுக் கொண்டு கடைப்பிடிக்கிறது. அரசுகள் அங்கீகாரம் வழங்கி வருகின்றன.
தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள், மதங்கள் குறிப்பாக இந்து மக்கள் ஆத்ம ஈடேற்றத்துக்காக வீடுகளில், நீர் நிலைகளில், புண்ணிய தீர்த்தங்களில், கோவில்களில் நினைவுகூர்ந்து ஆத்மசாந்திப் பிராத்தனைகளில் ஈடுபடுகின்ற மனித உரிமையை போற்றி வருகின்றார்கள். இலங்கையில் சென்ற காலத்தில் அந்தநாகரீகம் பேணப்பட்டது.
இப்பொழுது அந்தநிலமை மாற்றப்படுகிறது. 1971களில் 80களில் அரச ஆட்சியை கைப்பற்றுவதற்காக ஆயுதபுரட்சியில் ஈடுபட்டவர்கள் ஜே.வீ.பீயினர் கார்த்திகைத் திங்களில் இறந்தவர்களை நினைவு கூருகிறார்கள்.
அரசு இறந்த இராணுவீரர்களுக்கு மரியாதை செய்கிறது. பாராளுமன்ற வளாகத்தில் இன்நினைவு மண்டபம் உண்டு. ஒரு நாளைப்பிரகடனம் செய்து ஒன்றுகூடி அணிவகுத்துப் போற்றுகிறது.
ஆனால் இலங்கையில் தமிழ் மக்களுக்கு, தமிழ்பேசும் மக்களுக்கு இறந்தவர்களை நினைவுகூர்ந்து ஆத்மசாந்திப் பிராத்தனை செய்வதற்கு மனிதஉரிமை மறுக்கப்படுவது நாகரீகமற்ற, ஜனநாயகமற்ற மனிதகுல விரோத செயலாகவே மக்கள் மனங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
காவற்துறை வலிந்து நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடுத்து ஆத்மசாந்தி பிராத்தனைக்காக நினைவு கூருவதற்காக தடைகளை விதிக்க முயற்சிக்கிறது.
நீதிமன்றங்கள் மக்கள் தங்கள் ஆத்மசாந்திப் பிராத்தனை நினைவுகூருதல் கடமைகளை, ஈமைக்கடனை நிறைவேற்ற அனுமதி வழங்கி வருகின்றன.
சில இடங்களில் நீதிமன்றங்கள் அனுமதி மறுத்துள்ளன. கடந்த காலங்களில் நீதிமன்ற வழக்குகளில் வழக்கறிஞர்கள் வாதாடி கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை பெற்றுள்ளனர், நினைவுகூர ஆத்மசாந்தி, ஈமைக்கடன் நிகழ்த்த அனுமதித்து நீதிவழங்கி உள்ளன.
ஆனால் தமிழ் மக்களின் கார்த்திகைத் தினங்களில் தீபமேற்றி விழா எடுக்கும் நிகழ்ச்சிகளைக் கூட அரசு காவல்துறையினர் தடை செய்கின்றனர். ஆனபடியால் அரசினதும் காவல் துறையினதும் இத்தகைய மனிதகுலத்திற் கெதிரான இறந்தவர்களின் ஆத்மாக்களை நினைகூர்ந்து ஈமைக்கடன் செய்யும் மக்களை கூட மறுக்கின்ற அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் மக்களாகிய நாம் ஜனநாயக வழியில் எதிர்த்து நிற்கவேண்டும்.
கொரொனா தொற்று நோயைப் பரவவிடாமல் செயற்பட வேண்டிய பொறுப்பையும் நாம் சுமந்து நிக்கின்றோம் என்பதை மனதில் நிறுத்தவேண்டியுள்ளோம்.
எவ்வாறெனினும் இறந்த எம்மைவிட்டுப் பிரிந்த ஆத்மாக்களுக்குப் பிரார்த்திக்கும் நினைவுகூரும் முகமாக ஆத்மகடனை அமைதியாக எம், வாழுமிடங்களில், நம் இதயங்களில் நினைவுகூர்ந்து விளக்கேற்றி ஆத்மகடன் நிறைவேற்றுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். இது மக்கள் அடிப்படை உரிமை அதனை நிலைநாட்டுவோம்.
அத்துடன் தமிழ்த்தேசிய இனங்களுக்கிடையே உள்ள மதங்களுக்கிடையில் முரன்பாடு ஏற்படாமல் நல்லினக்கத்துடன் இந் நினைவேந்தல் நிகழ்ச்சியை முன்னெடுக்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றுள்ளது.
Post a Comment