இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் 9 மாத குழந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையை டெல்லி மகளிர் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் உடனான போட்டிகளில் இந்திய அணி மோசமான தோல்வியை அடைந்தது. இது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், சிலர் கேப்டன் விராட் கோலியின் 9 மாத குழந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும், ஆபாசமான முறையிலும் பதிவுகளை மேற்கொண்டனர்.
இது பல்வேறு தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சூழலில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி காவல்துறையை டெல்லி மாநில மகளிர் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்த விவரங்களையும் தங்களிடம் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை உள்ளிட்டவற்றை உடனடியாக இந்த விஷயத்தில் மேற்கொள்ள வேண்டுமென்றும், குழந்தைகளின் பாதுகாப்பில் எந்தவிதமான சமரசத்தையும் மேற்கொள்ள முடியாது என்றும் டெல்லி மகளிர் ஆணையம் டெல்லி காவல்துறைக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment