தமிழர்களை ஒற்றையாட்சிக்குள் முடக்கி, சீனாவிடமிருந்து இலங்கையை தம்வசம் வைத்திருக்க இந்தியாவும் மேற்கு நாடுகளும் முயல்கின்றன. இதற்காகவே அவற்றின் எடுபிடிகளான சட்டத்தரணிகளும், தங்களைத் தாங்களே மூத்த அரசியல் தலைவர்கள் என்று சொல்பவர்களும் தாங்களே நிராகரித்த 13ஐ இப்போது - 30 வருடங்களின் பின்னர் கேட்கிறார்கள். - இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எந்த ஜனநாயக நாட்டிலாவது அரசமைப்பை நடைமுறைப்படுத்துமாறு கேட் கிறார்களா? அரசமைப்பு என்றால் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படி நடைமுறைப்படுத்தப்படாவிடின் அதன் பெறுமதி பூச்சியம். 35 வருடங்களாக இந்த அரசமைப்பில் - 13ஆம் திருத்தத்தில் ஏதோ இருக்கிறது. அதை நடைமுறைப் படுத்தவில்லை என்று கேட்பதா? தமிழர்கள் தமது பிரச்னைக்கு தீர்வையடைவது எப்படி? அரசமைப்பு ஊடகத்தானே அதை அடையமுடியும் - வேறு எந்த வழியிலும் முடியாது. அப்படி இருக்கும்போது இப்போதுதானே அதிகாரப் பகிர்வை பேசவேண்டும். ஆனால், இப்போது - அதுவும் ஒற்றையாட்சிக்குள் 13ஐ நடைமுறைப்படுத்தக் கேட்கிறார்கள். இந்த நேரத்தில்தானே, தமிழ்மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று ஒருமித்து கேட்க வேண்டும் அதை செய்யத் தயாரில்லை. இவர்களின் சமஷ்டி என்பது சும்மா பெயருக்குத்தான். 35 வருடங்களாக தோற்றுப்போன - எட்டாத இடத்தில் இருக்கும் 13இல் இன்னமும் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் தலைமைகள் அல்ல. மடையர்கள் - முட்டாள்கள். ஆனால், இவர்கள் முட்டாள்கள் இல்லை - நிச்சயம் முட்டாள்கள் இல்லை. இந்நிலைக்கும் பூகோள அரசியலில் சீனாவின் வருகை முக்கியமாகிறது. இந்தியாவும் மேற்கு நாடுகளும் சீனாவிடம் இருந்து இலங்கை விடுபட வேண்டும் என்ற தேவை உள்ளது. அந்தப் பின்னணியில் அவை என்ன சொல்கின்றன என்றால், நீங்கள் சீனாவை கைவிடுங்கள் நாங்கள் தமிழனை ஒற்றையாட்சிக்குள் முடக்குகிறோம் என்று.
இதை தங்கள் முகவர்கள் - எடுபிடிகள் ஊடாக செய்கிறோம் என்பதே. சட்டத்தரணிகள், தங்களைத் தாங்களே மூத்த தலைவர்கள் என்று சொல்பவர்கள் தாங்களே நிராகரித்த 13ஐ இப்போது 30 வருடங்களின் பின்னர் நடைமுறைப்படுத்த கோருகிறார்கள். விக்னேஸ்வரன் அதைத் தாண்டி 13 தேவை - புதிய அரசமைப்பிலும் அப்படியே அது உள்வாங்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். இந்தியாவுக்கும் இதுவே வேண்டும் என்று தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டத்தின் பின்னர் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் பேசிய போது போட்டுடைக்கும் வேலையை அவர் செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment