இயக்குந்ர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சூரி, சரண்யா மோகன், ஆடுகளம் கிஷோர், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு படம் இன்றுடன் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இயக்குநர் சுசீந்திரன் வெண்ணிலா கபடி குழு படக்குழுவுக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார்.
விஷ்ணு விஷாலின் யதார்த்தமான நடிப்பு, அழகாக கதை முழுக்க டிராவல் ஆகும் அந்த காதல், ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த பரோட்டா காமெடி என படம் முழுக்க பல நினைவுகளை சுமந்து நிற்கிறது.
வெண்ணிலா கபடி குழு
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான படங்களிலேயே தரமான படம் என்றால் அது வெண்ணிலா கபடி குழு தான். கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி வெளியானது. விஷ்ணு விஷால் ஹீரோவாகவும் சரண்யா மோகன் ஹீரோயினாகவும் சூரி காமெடியனாகவும் கிஷோர் கபடி கோச்சாகவும் நடித்து வெளியான படம் இது.
வித்தியாசமான கிளைமேக்ஸ்
கபடி மீது ஆர்வம் கொண்ட மாரிமுத்து (விஷ்ணு விஷால்) தனது டீமுடன் கபடி விளையாடி வென்று காதலிலும் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் கணித்த நிலையில், கடைசியாக மாரிமுத்து கபடி விளையாட்டில் எதிரணி வீரர் (விஜய்சேதுபதி) நெஞ்சில் எட்டி உதைத்ததில் ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விடுவார். அது தெரியாமல் சரண்யா மோகன் அடுத்த ஆண்டு திருவிழாவில் மாரிமுத்துவை தேடுவதும் கடைசி வரை விஷ்ணு விஷால் இறந்த செய்தி தெரியாமலே செல்வதுமாக முடிக்கப்பட்டிருக்கும். ஹேப்பி எண்டிங்காகவே இந்த படத்தை முடித்திருக்கலாமே என ரசிகர்கள் பலரும் அப்போதே கருத்து தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பரோட்டா காமெடி
விஷ்ணு விஷால் அறிமுகமான இந்த படத்தில் சூரியின் பரோட்டா காமெடி வேற லெவலில் டிரெண்டானது. எல்லா கோட்டையும் அழியுங்க நான் முதலில் இருந்து சாப்பிடுறேன் என பரோட்டா பந்தயம் வைத்தவர்களுக்கே அதிர்ச்சி கொடுக்கும் அளவுக்கு சூரி சிறப்பாக காமெடி பண்ணியிருப்பார். விரைவில் வெற்றிமாறனின் விடுதலை படத்தில் சீரியஸாக சூரி எப்படி நடித்திருப்பார் என்பதை காண ரசிகர்கள் ஆர்வம்.
கொரோனாவில் மரணம்
வெண்ணிலா கபடி குழு, புதுப்பேட்டை, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா கடந்த ஆண்டு மே மாதம் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. வெண்ணிலா கபடி குழு படத்தில் சேகர் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
12 ஆண்டுகள் நிறைவு
வெண்ணிலா கபடி குழு திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. ரசிகர்கள் இப்பவும் வெண்ணிலா கபடி குழுவை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இயக்குநர் சுசீந்திரன் அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் அதில் நடித்த நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்து நன்றி கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
சொதப்பிய இரண்டாம் பாகம்
வெண்ணிலா கபடி குழு படம் போலவே அதன் இரண்டாம் பாகமும் ஹிட் அடிக்கும் என நினைத்து இயக்கிய இயக்குநர் சுசீந்திரனுக்கு முதல் படம் கொடுத்த வெற்றியை இரண்டாம் பாகம் கொடுக்க தவறியது குறிப்பிடத்தக்கது. சூரியை வைத்து அதிலும் பரோட்டா காமெடியெல்லாம் செய்திருந்தாலும் ரசிக்கும் படியாக அமையவில்லை.
Post a Comment