தற்போதைய அரசாங்கம் சர்வாதிகார இராணுவ ஆட்சிக்குள் பிரவேசிப்பதற்கு தயாராகி வருகிறதா என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.
பொது மக்களின் கருத்துச் சுதந்திர உரிமையைப் பறித்து சர்வாதிகார ஆட்சியை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் தமது எதிர்ப்பை காட்டுகின்றனர்.
விவசாயிகளுக்கு உரம் இல்லாமல், வயல்கள் பாழாகி, பஞ்சம் வரவிருக்கும் நிலையில், எரிவாயு தட்டுப்பாடு மற்றும் துறைமுகத்தில் இருந்து கொள்கலன்கள் விடுவிக்கப்படாததால் பொது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொது மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், ஜனாதிபதியை விமர்சித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் பேச்சாளர் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அரசாங்கம் தோல்வியடைந்து உள்ளதாகவும், அரசாங்க உறுப்பினர்களே இன்று அரசாங்கத்தை விமர்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். பொருளாதாரத்தின் மீது அரசாங்கத்தின் கட்டுப்பாடு இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment