புலம்பெயர் நாடுகளில் இருந்து வருகின்றவர்கள் இலங்கையில் பதிவுத் திருமணம் செய்து கொள்வதற்கு அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறைகளினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக வடக்கு மாகாண விவாகப் பதிவாளர்களின் பிரதிநிதிகள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினர்.
கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இச்சந்திப்பின் போது, விவாகப் பதிவு தொடர்பான புதிய நடைமுறைகள் நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள போதிலும், ஒப்பீட்டளவில் வடக்கு மாகாணத்திலேயே புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகமானோர் திருமணப் பதிவுகளை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற சுமார் 60 இற்கும் மேற்பட்ட விவாகப் பதிவாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், வாழ்வாதார பாதிப்புக்களை எதிர்கொள்ளும் சூழல் ஏற்படும் எனவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதுதொடர்பாக கவனம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதிக்கப்படுகின்றவர்கள் அனைவரும் தமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பான ஒருமித்த கருத்தினை முன்வைக்கும் பட்சத்தில், குறித்த விவகாரத்தினை அமைச்சரவையில் பிரஸ்தாபித்து நியாயமான தீர்வினை பெற்றுத் தரமுடியும் என்று தெரிவித்தூள்ளார். - 05.01.2022
Post a Comment