தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு! - Yarl Voice தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு! - Yarl Voice

தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு!



தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு- ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்
நாளை (06-01-2022) முதல் தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. நேற்று ஒரு நாள் பாதிப்பு ஆயிரம் உயர்ந்து, புதிதாக 2,731 பேருக்கு தொற்று உறுதியானது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பாதிப்பு வேகமாக அதிகரித்துவருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் 876 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று இது 1,489-ஆக அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் பரவலும் அதிகரித்துவருகிறது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இது தொடர்பாக சிறிது நேரத்துக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , ``தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதனால், இனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவிருக்கிறது. அதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்றுவரும் தடுப்பூசி முகாம் இனி சனிக்கிழமைகளில் நடைபெறும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நாளை (06-01-2022) முதல் தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``மாநிலம் முழுவதும் 6.01.2022 முதல் வார நாள்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை. எனினும் இந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டின் போது, பின்வரும் அத்தியாவசிய செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

* மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள்.

* மாநிலங்களுக்கு இடையேயான பொது / தனியார் பேருந்து சேவைகள்.

* அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும்.

* பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

* உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்படலாம். பணிக்குச் செல்லும் பணியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். இருப்பினும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்துமாறு தொடர்புடைய நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வரும் 09-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். இருப்பினும், அத்தியாவசியப் பணிகளான மருத்துவ பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல், டீசல் பங்குகள் இயங்க அனுமதிக்கப்படும்.

* பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் இயங்காது.

* 09-01-2022 (ஞாயிறு) முழு ஊரடங்கின் போது, உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படும்.

* 09-01-2022 மற்றும் வார நாள்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை விமானம், ரயில், மற்றும் பேருந்துகளில் பயணிக்க மக்கள் தங்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

* மழலையர் காப்பகங்கள் தவிர மழலையர் விளையாட்டு பள்ளிகள் நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை.

* அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

* பொதுத் தேர்வுக்கு செல்லும் மாணவர்களின் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்.

* அரசு, தனியார், மருத்துவ மற்றும் துணை மருத்துவ கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20-ம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.

* பயிற்சி நிலையங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

* பொருட்காட்சி மற்றும் புத்தகக் கண்காட்சிகள் ஒத்திவைக்கப்படும்

* பொது மற்றும் புறநகர் ரயில்களில் உள்ள இருக்கைகளில் 50 சதவிகிதம் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

* மெட்ரோ ரயிலில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

* அனைத்து அரசு மற்றும் தனியார் அமைப்புகளால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகின்றன.

* பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.

* அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதி வழங்கப்படும்.

* அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாள்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.

* சமூக கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும்.

* மீன் மற்றும் காய்கறி கடைகளில், குறிப்பாக வார இறுதி நாள்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மீன் மற்றும் காய்கறி சந்தை அமைக்க சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* தற்போது செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களில் இருந்து செல்லும் பேருந்துகளை மண்டலம் வாரியாக பிரித்து வெவ்வேறு இடங்களிலிருந்து பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்து துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

* கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் அனைத்து சேவை துறைகள் போன்ற பொதுமக்கள் செல்லும் இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் உரிமையாளர்கள் அனைவரும் இரண்டு தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்.

* அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் 09.01.2022-க்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி அதற்கான சான்றிதழை தொடர்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அங்கு செல்லும்போது அலுவலக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி சான்றிதழை உடன் வைத்துக் கொள்ள வேண்டும்

0/Post a Comment/Comments

Previous Post Next Post