தற்சார்பு பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்த களத்தில் இறங்குவோம் - சட்டத்தரணி சுகாஷ் - Yarl Voice தற்சார்பு பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்த களத்தில் இறங்குவோம் - சட்டத்தரணி சுகாஷ் - Yarl Voice

தற்சார்பு பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்த களத்தில் இறங்குவோம் - சட்டத்தரணி சுகாஷ்



வெளிநாடுகளை நம்பி இருக்காது எமது பகுதியில் உள்ள வளங்களை நாங்கள் பயன்படுத்த வேண்டும். நாம் வெறுமனே கோரிக்கையை மாத்திரம் விடாது தற்சார்பு பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் களத்தில் இறங்கவுள்ளோமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார நிலை பற்றி சிந்திக்க வேண்டிய நிலையில் தமிழ் சமூகம் காணப்படுகின்றது. டொலரின் கையிருப்பு மிகவும் குறைந்து வருகின்றது. நாட்டினுடைய பொருளாதாரம் பற்றி அபாயகரமான கருத்துக்கள் வெளியாகி வருகின்றது.

பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிகை இந்த வருடத்தில் இலங்கை திவாலாகும் என்ற விடயத்தை நேற்றைய தினம் வெளிப்படுத்தியுள்ளது. கார்டியன் பத்திரிகையில் உள்ள விடயங்கள் இலங்கையில் நிதர்சனமாகி வருகிறது. அது மாத்திரமல்லாமல் கார்டியன் பத்திரிகையினுடைய கருத்தை உறுதிப்படுத்துவது போல அரிசி உற்பத்தியாளர் சங்கம் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் இலங்கையில் அரிசி ஒரு கிலோ 300 ரூபாயை தாண்டும் என்று தெரிவித்துள்ளது. இதைவிட இலங்கை பஞ்சத்துக்கு தள்ளப்படும் என்றும் எதிர்வு கூறியுள்ளது.

இதை வெறுமனே இலங்கைக்கு மட்டுமான பாதிப்பாக கருதிவிட முடியாது. ஏனென்றால் இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழ் தேசம் மிக மோசமாக ஓரவஞ்சனையாக அரசாங்கத்தால் நடத்தப்படும் என்பது தெரிந்த விடயம். பஞ்சம் ஏற்பட்டால் எதிர்காலத்தில் அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதில் நாம் சிந்திக்க வேண்டும்.

தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் என்ற வகையில் எங்களுடைய மக்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு 
எமக்குள்ளது. அந்த வகையில் நாங்கள் எங்களுடைய மக்களை பொருளாதாரக் கட்டமைப்பின் அடிப்படைகளான  விவசாயம் மீன்பிடியில் தற்சார்பு பொருளாதார கட்டமைப்பை விருத்தி செய்ய வேண்டும். 

இதை செய்யாவிட்டால் எங்களுடைய தமிழ் மக்கள் மிக மோசமான நிலைமையை நோக்கி தள்ளப்படுவதை எவராலும் தடுக்க முடியாது. ஆகவே வடக்கு விவசாய அமைப்புகள், கால்நடை அமைப்புகள், இளைஞர் கழகங்கள் சமூக அமைப்புகள் எல்லாம் இதற்கு முன்வரவேண்டும். 

வீட்டிலேயே தோட்டம் செய்யக்கூடிய வசதியுள்ளவர்கள் தங்களால் பயிரிடக்கூடிய பயிர்களை வீட்டுத்தோட்டத்தில் பயிரட வேண்டும். விவசாயிகள் தங்களால் முடிந்த அளவுக்கு விவசாய உற்பத்திகளை செய்து சேமித்து வைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக குறுங்கால பயிர்களை மேற்கொள்ளவேண்டும். ஏப்ரல் மாதம் சிவப்பு எச்சரிக்கை காட்டப்பட்டுள்ள நிலையில் சில மாதங்களுக்குள் பயன்தரக்கூடிய குறும்பயிர்களை விவசாயிகள் பயிரிடவேண்டும்

வெளிநாடுகளை நம்பி இருக்காது எமது பகுதியில் உள்ள வளங்களை நாங்கள் பயன்படுத்த வேண்டும். நாம் வெறுமனே கோரிக்கையை மாத்திரம் விடாது தற்சார்பு பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை இளைஞர் அணியை களத்தில் இறக்கி ஈடுபடவுள்ளது.

அந்தந்த பிரதேசங்களில் மூலப்பொருட்களைக் கொண்டு முடிவுப் பொருளை உற்பத்தி செய்வதற்காக  சிறு கைத்தொழிலை ஆரம்பிக்கவுள்ள ஆர்வமுடைய இளைஞர்களுக்கு சரியான செயல் திட்டங்களுடன் எம்மை தொடர்பு கொள்ளலாம். அதற்கான வசதிகளை உதவிகளையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

வீட்டுத் தோட்டங்களில் சிறு பயிர்கள் செய்ய விரும்புவர்கள் எமது பிரதேச அமைப்பாளர்கள் தொடர்புகொண்டு உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். எதிர்காலத்தில் வர இருக்கும் இந்த இக்கட்டான பொருளாதார நெருக்கடியில் தமிழ் பேசும் தப்பிப் பிழைக்க வேண்டுமாக இருந்தால் விவசாயம் மீன்பிடி கைத்தொழில்  போன்றவற்றில் பொருளாதார கட்டமைப்பை நாங்கள் வெளிப்படுத்துவது தான் தமிழ் மக்களை பாதுகாக்கும் என்பதை உறுதியாக நம்புகின்றோம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post