உரப் பற்றாக்குறை: பூங்கொத்து, மலர் வளையங்களின் விலை சடுதியாக அதிகரிப்பு - Yarl Voice உரப் பற்றாக்குறை: பூங்கொத்து, மலர் வளையங்களின் விலை சடுதியாக அதிகரிப்பு - Yarl Voice

உரப் பற்றாக்குறை: பூங்கொத்து, மலர் வளையங்களின் விலை சடுதியாக அதிகரிப்பு



திருமணங்கள் அல்லது இறுதிச் சடங்குகள் எதுவாக இருந்தாலும், உலகில் எங்குமுள்ள மக்களின் வாழ்வில் பூக்கள் இன்றியமையாத பகுதியாகவுள்ளது.

எனினும், இலங்கையில் உரப் பற்றாக்குறையால் விநியோகஸ்தர்கள் போராடுவதால், பூங்கொத்துகள் மற்றும் மலர் வளையங்கள் இப்போது உயர் விலையில் விற்கப்படுகின்றன.

அலங்கார மற்றும் அலங்கார பூக்களின் விற்பனை அழிந்து வருகிறது.

கொழும்பு - 10 டீன்ஸ் வீதியிலுள்ள மலர் விற்பனை நிலைய வியாபாரிகள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

அதிகம் விரும்பப்படும் ரோஜா பூவானது முன்னர் 80 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவ தாகவும், தங்களுக்கு மலர் வளையம் செய்யக் கூட பூக்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் விற்பனை யாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மற்றுமொரு விற்பனையாளர் தெரிவிக்கையில், முன்னர் 2500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட மலர்வளையமானது தற்போது 4000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், மலர் வளையத்திற்கு முன்னர் 500 பூக்கள் வரை பயன்படுத்துவதாகவும்,தற்போது அது 50 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நுவரெலியாவில் தற்போது பூக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமைக்கு உரப் பற்றாக்குறையே பிரதான காரணம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் மலர்க் கிராமம் என அழைக்கப்படும் கெப்பெட்டிப்பொல, வெலிமடை மற்றும் ஊவா-பரணகம ஆகிய பிரதேசங்களில் மலர்கள் தரத்துக்கு பொருந்தாத காரணத்தினால், பூக்களின் அறுவடைகள் அனைத்தும் தற்போது வீணாகிவிட்டதால் விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளனர்.

நாளாந்தம் நூற்றுக்கணக்கான அழுகிய பூக்களை வெட்டி எறிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். தமது உழைப்பு, பணம், நேரம் என அனைத்தும் கண் முன்னே அழிவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post