மாகாண சபைகளின் கீழ் உள்ள வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதார பணியாளர்களை கருத்திற்கொண்டு மக்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவா் கூறியுள்ளார்.
எனினும் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் உருவான 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைக்கு சொந்தமாக உள்ள வைத்தியசாலைகள் உள்ளிட்ட நிறுவனங்களை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரும் விடயத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது உள்ள சுகாதார அமைப்பை வலுப்படுத்த வேண்டும். நாட்டின் எதிர் காலத்திற்கு இது சாதகமாக அமையும் எனவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, அபிவிருத்தி என்ற போர்வையில் ஏற்கனவே வடக்கு, கிழக்கில் மாகாண சபைகளின் கீழ் உள்ள வைத்தியசாலைகளை கையேற்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்குக் கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன.
இது 13 ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட சில அற்ப-சொற்ப அதிகாரங்களையும் தட்டிப் பறிக்கும் முயற்சி என வடக்கு, கிழக்கில் இருந்து கண்டன குரல்கள் எழுந்தன.
உண்மையில் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யும் எண்ணம் மத்திய அரசுக்கு இருக்குமானால் மாகாண அரசின் கீழ் அவை உள்ள நிலையிலேயே அதனைச் செய்ய முடியும்.
மாறாக மத்திய அரசின் கீழ் அவற்றை பொறுப்பேற்க முற்படுகின்றமை மத்தியின் மாகாணங்களுக்கான அதிகாரங்களை பறிக்கும் முயற்சியின் ஒரு அங்கமே என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதேபோன்றே மாகாண சபைகளின் கீழ் உள்ள பாடசாலைகளையும் தேசியப் பாடசாலைகள் என்ற போர்வையின் கீழ் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் சில உள்ளூர் அரசியல்வாதிகளின் துணையுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment