யாழ்ப்பாணம் கட்டுவன் மயிலிட்டி பகுதியில் காணி விடுப்பு என கூறி 11 பரப்பு காணியில் 7 பரப்பை விடுவித்து மிகுதியை படையினர் ஆக்கிரமித்துள்ளதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்னமும் 4 பரப்பு காணி விடுவிக்கப்படவில்லை.அத்துடன் மக்கள் காணிக்கு மேலாக பொது வீதி அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகிறது.
இது தனியார் காணி என்று தெரியும். ஆனால் அரச அதிகாரிகள், படையினருடன் இணைந்து இந்த வீதியை அமைத்து வருகின்றனர்.
எம்மிடம் எந்த வார்த்தையோ, அனுமதியோ கேட்கவில்லை. வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் சில அரசியல்வாதிகளின் ஆதரவோடு இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.
சுமார் 9 பேரின் காணிகள் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் கருத்து தெரிவிக்கையில்,
வலிகாமம் வடக்கில் இன்னமும் மூவாயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்படாமல் உள்ள நிலையில், விமான நிலையத்துக்கான பிரதான பாதை என தெரிவித்து வீதி அமைத்து வருகின்றனர்.
கடந்த 5 வருடங்களாக இந்த வீதி விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் இராணுவத்தின் ஊடாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் காணி உரிமையாளருக்கு அறிவிக்காமல் இப்போது சுமார் 4 ஏக்கர் மக்களின் காணியின் ஊடாக வீதி அமைத்து வருகின்றனர்.
வீதி விடுவிக்கப்படுவதாக அங்கயன் எம்.பி கூறியுள்ளார். இது முற்றிலும் பொய். மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டே வீதிகள் அமைக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய தான் பாதுகாப்பு செயலராக இருந்த கால கட்டத்தில் படையினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகள் 90 வீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளன, மிகுதியும் விடுவிக்கப்படும் என்று கூறிய நிலையில் இன்று இவ்வாறு மக்களின் காணிகள் மேல் வீதிகள் அமைக்கப்படுகிறது.- என்றார்.
Post a Comment