- Yarl Voice - Yarl Voice



யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சட்ட ஆவணங்களை வழங்குதல் மற்றும் சட்டச் சிகிச்சைக்கான நடமாடும் சேவை வழங்கல் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல்
நடமாடும் சேவையில் பல திணைக்களங்கள் கலந்துகொள்ளவுள்ளமையினால் பொதுமக்கள் இந் நடமாடும் சேவையை பயனுள்ளவகையில் பயன்படுத்தி தீர்வு காணமுடியும்" என மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சட்ட ஆவணங்களை வழங்குதல் மற்றும் சட்டச் சிகிச்சைக்கான நடமாடும் சேவை வழங்கல் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (2022.01.07) மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
சட்ட ஆவணங்கள் வழங்குதல் மற்றும் சட்டச் சிகிச்சைக்கான நடமாடும் சேவையானது யாழ்ப்பாண மாவட்டத்தில் இம்மாத இறுதியில் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  
இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது "நடமாடும் சேவையில் பல திணைக்களங்கள் பங்குதாரர்களாக கலந்துகொள்ளவுள்ளமையினால் பொதுமக்கள் இச் சேவையை பயனுள்ளவகையில் பயன்படுத்தி மக்கள் தேவைகளை குறித்த மட்டத்திலேயே தீர்க்கமுடியும். அத்தோடு பிரதேச செயலக மட்டத்தில் மக்களது பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை மாவட்ட செயலகத்திற்கு அறிக்கையிடுவதன் மூலம் இலகுவில் தீர்வுகளை பெறமுடியும். மேலும் நில உரிமையில் சட்டரீதியான பல்வேறுபட்ட பிரச்சினைகள் காணப்படுவதால் இச்சந்தர்ப்பத்தை மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்" எனவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் நீதியமைச்சின் கீழ் இயங்குகின்ற தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்திற்கான பணிப்பாளர் நாயகம் டீப்தி லமகேவா அவர்கள் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது " யாழ்.பல்கலைக் கழகத்தில் மூன்று இனங்களை சேர்ந்த மாணவர்களும் கல்வி கற்பதனால் நடமாடும் சேவையின் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க கலந்துரையாடல் மிகவும் பயனுறுதிவாய்ந்தது ஆகும். இவ் நல்லிணக்க கலந்துரையாடலை தொடர்ச்சியாக ஆகக் குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்னெடுத்தல் வேண்டுமென ஆலோசனை வழங்கியதோடு இந் நல்லிணக்க செயலமர்வில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பல விடயங்களை உள்ளடக்குதல் வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மேலும், இந் நடமாடும் சேவையில் நிலப் பிரச்சனைகளுக்கான சட்டரீதியான ஆலோசனை வழங்குதல், சட்ட ஆவணங்களை வழங்குதல், போதைப் பொருள் பாவனையினை குறைத்தல், நல்லிணக்கம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்களுடனான கலந்துரையாடல், சட்ட உதவி விழிப்புணர்வு சேவைகள்,பல்லின கலாசாரம் ஆகியன பற்றிய முன்னேற்பாடுகள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில்,மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன்,மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எஸ்.முரளிதரன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்(திட்டமிடல்)உமாகாந்தன் மற்றும் மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், மாகாண காணி ஆணையாளர், தேசிய ஆட்பதிவு திணைக்கள உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், சமாதான நீதவான்களின் மாகாண பிரதிநிதி மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post