பூஸ்டர் தடுப்பூசியை பெறுவதில் வடக்கில் பொதுமக்கள் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை! - Yarl Voice பூஸ்டர் தடுப்பூசியை பெறுவதில் வடக்கில் பொதுமக்கள் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை! - Yarl Voice

பூஸ்டர் தடுப்பூசியை பெறுவதில் வடக்கில் பொதுமக்கள் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை!



இரண்டாவது தடுப்பூசியை பெற்று மூன்று மாதத்தின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் வடக்கில் பொதுமக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் 14135 கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் செப்டம்பர், ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து டிசம்பரில் 1381 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். ஜனவரி 4 வரை 33 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

கொரோனா இறப்புகளை பொறுத்தவரை கடந்த வருடம் செப்டம்பரில் 386 இறப்புகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவை படிப்படியாக குறைவடைந்து டிசம்பரில் 41 உயிரிழப்புகள் பதிவானது. இந்த வருடத்தில் இதுவரை 3 கொரோனா இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனாத் தடுப்பூசியைப் பொறுத்தவரை வட மாகாணத்தில் முதலாவது டோஸ் தடுப்பூசியை 90 வீதமானவர்களும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 80 வீதமானவர்களும் பெற்றுள்ள நிலையில் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியை 30 வயதுக்கு மேல் 25 வீதமானவர்கள் பெற்றுள்ளனர்.

இரண்டாவது தடுப்பூசியை பெற்று மூன்று மாதத்தின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் வடக்கில் பொதுமக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post