இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்திய படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உத்தரவை தகுதி வாய்ந்த அதிகாரிகள் எழுத்து மூலமாக தரும் வரை தமது போராட்டம் தொடரும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் பருத்தித்துறை - சுப்பர்மடம் பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மீனவர்கள் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில், இந்திய இழுவைப் படகுகளின் ஆக்கிரமிப்பினால் நமது கடல் வளம் அழிக்கப்படுவதுடன் சொத்துக்களும் நாசமாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இது உயிர்களையும் பறித்து எடுத்திருக்கின்றது.
இந்நிலையில் இந்த அராஜகத்திற்கு நிரந்தர முடிவு காணும் நிலையில் மீனவ சமுதாயத்தில் இருந்து பொன்னாலை தொடக்கம் பருத்தித்துறை வரை சாலை மறியல் போராட்டத்தையும் கடற்றொழில் மறிப்பு போராட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றோம்.
இப்போராட்டத்தை பாதிக்கப்பட்ட மீனவ சமுதாயம் ஒன்றிணைந்து மக்கள் போராட்டமாக முன்னெடுத்து வருகின்றது. இதற்கு சமாசத்திற்கும் மாவட்ட சம்மேளனத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
மக்களால் தொடரப்படும் இந்த போராட்டமானது மீனவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தொடரும். மேலும் போராட்டத்தை நடத்துவதற்கு பொதுமக்களிடம் ஆதரவு கோரி நிற்கின்றோம்.
இப் போராட்டத்திற்கு வர்த்தக சங்கங்கள் போக்குவரத்து அமைப்புகள் பொது அமைப்புகளின் ஆதரவு வழங்குமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
Post a Comment