வயல் காணிகளில் தமிழர் விவசாயம் செய்ய கூடாது! குருந்தூர்மலையில் பௌத்த பிக்கு அடாவடி - Yarl Voice வயல் காணிகளில் தமிழர் விவசாயம் செய்ய கூடாது! குருந்தூர்மலையில் பௌத்த பிக்கு அடாவடி - Yarl Voice

வயல் காணிகளில் தமிழர் விவசாயம் செய்ய கூடாது! குருந்தூர்மலையில் பௌத்த பிக்கு அடாவடி



முல்லைத்தீவு குமுளமுனை குருந்தூர்மலை அடிவாரத்தில் உள்ள தண்ணிமுறிப்பு , குமுளமுனை கிராமத்தை சேர்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான வயல் காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என குருந்தூர்மலையில் அமர்ந்துள்ள பௌத்த பிக்கு தடை விதித்துள்ளார்.

மேலும் தெரியவருகையில்,

குருந்தூர் குளம் நீர்ப்பாசன எல்லைக்குள் அடங்கும் 07 குடும்பங்களுக்கு சொந்தமான 36 ஏக்கர் வயல் காணிகளில் கடந்த நவம்பர் மாதம் கால போக செய்கையை மேற்கொள்ள காணி உரிமையாளர்கள் முற்பட்டுள்ளார்கள்.

அவ் வேளை அவ்விடத்துக்கு வருகைதந்த குருந்தூர்மலையில் அமர்ந்துள்ள கல்கமுவ சாந்தபோதி நாயக்க தேரர் என்ற பௌத்த பிக்குவும் தொல்லியல் திணைக்களத்தினரும் மேற்படி காணிகள் அனைத்தும் குருந்தூர்மலை புண்ணிய பௌத்த பூமிக்கு சொந்தமான தொல்லியல் நிலங்கள் எனவும் இப்பகுதியில் இனிமேல் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது எனவும் அவ்வாறு ஈடுபட்டால் கைது செய்வோம் என அச்சுறுத்தியுள்ளதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் கடந்த கால போக செய்கையை செய்யமுடியாது தாம் விவசாய நடவடிக்கையை கைவிட்டுள்ளதாகவும் காணிக்குரிய ஆவணங்கள் அனைத்தும் இருந்தும் கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் காணிக்குரிய அனுமதிகளை உறுதிப்படுத்துள்ள நிலையிலும் பௌத்த பிக்குவின் அச்சுறுத்தல் காரணமாக அந்த நிலங்களில் விவசாய நடவடிக்கையை கடந்த கால போக செய்கை காலம் முதல் கைவிட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பௌத்த பிக்குவால் செய்கை பண்ணுவதற்கு தடை செய்யப்பட்ட இந்த விவசாய நிலங்கள் பரம்பரை பரம்பரையாக தாம் விவசாயம் மேற்கொண்டுவந்த நிலங்கள் என்பதோடு தமது வாழ்வாதாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான தமது பூர்வீக சொத்து எனவும் பாதிக்கப்பட்டுள்ள 07 காணி உரிமையாளர்களான தமிழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சம்மந்தப்பட்ட தரப்புகள் குறித்த விவசாய நிலங்களில் தடையின்றி தாம் விவசாய நடவடிக்கையை மேற்கொள்ள உதவிபுரிய வேண்டும் எனவும் காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post