வடக்கு கிழக்கில் தொல்லியல் துறை, மகாவலி அதிகாரசபை, வனத்துறை உள்ளிட்ட துறைகளினால் மக்களது காணிகள் கையகப்படுத்தப்படுவது தொடர்பில் உரிய கரிசனையோடு நாம் செயற்பட்டு வருகின்றோம். இவ்விடயம் தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் என்ற அடிப்படையில், யாழ் மாவட்டத்தில் அபிவிருத்திகளை முன்னெடுக்கும்போது இத்தகைய காணி கையப்படுத்தல்களால் நாம் பெரும் சாவல்களை சந்திக்கின்றோம் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளோம்.
நாட்டின் ஏனைய பாகங்களோடு ஒப்பிடுகையில் வடக்கு கிழக்கில் மக்கள் இந்த காணி கையகப்படுத்தலினால் அதிகம் பாதிப்புறுகிறார்கள் என்பதோடு, பிரதேச சூழ்நிலைகளையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு இவை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் மக்கள் பிரதிநிதியாகவும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் என்ற அடிப்படையிலும் வலியுறுத்தி வந்துள்ளேன்
இவ்விடயம் தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களிடமும், மாண்புமிகு பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களிடமும் தொடர்ச்சியாக தெரியப்படுத்தி, இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக துறைசார் அமைச்சர்களை வடபகுதிக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தேன்.
குறிப்பாக, கடந்த மாத இறுதியில் (29.01.2022) யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்திருந்த நீதி அமைச்சர் கௌரவ அலி சப்ரி அவர்களுடன், யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற காணி விடயங்கள் தொடர்பான கலந்துரையாடலில் இவ்விடயம் தொடர்பில் விரைவில் எமது மக்களுக்கு தீர்வு வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தியிருந்தேன்.
அதன்போது, இவ்விடயம் தொடர்பில் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் கௌரவ C. B. ரத்நாயக்க அவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொள்வோம் என நீதி அமைச்சர் கௌரவ அலி சப்ரி அவர்கள் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காணி கையகப்படுத்தல் விடயத்தில் உள்ள சிக்கல்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் அழைப்பின் பேரில் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் கௌரவ C. B. ரத்நாயக்க அவர்கள் எதிர்வரும் மார்ச் மாதத்தின் முதல்வாரத்தில் யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அத்தோடு நீதி அமைச்சால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட “நீதிக்கான அணுகல்” செயற்றிட்டத்தில் மக்கள் முன்வைத்த காணி சார்ந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வொன்றை பெறுவதற்கான உயர்மட்ட கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 09 ம் திகதி வெளியுறவுத்துறை அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கௌரவ அமைச்சரின் விஜயம் மற்றும் தீர்வுக்கான உயர் மட்ட கூட்டம் தொடர்பான தகவல்களை அறிந்த, தமிழ்பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உடனடியாக கூடிப்பேசி தமது அரசியல் இருப்புக்கான அடையாள போராட்டத்தை ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் மேற்கொண்டுள்ளனர்.
தமது பங்காளித்துவத்துடன் முன்னெடுக்கப்பட்ட நல்லாட்சி காலத்தில், ஆரம்பிக்கப்பட்ட இக்காணி கையகப்படுத்தல்களை கட்டுப்படுத்த முடியாதவர்கள் தற்போது ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் வேகாத வெய்யிலில் அமர்ந்திருந்து கோசங்களை எழுப்பியும் பதாதைகளையும் தாங்கியும் ஊடக கவனத்தை பெற்று தமது அரசியல் இருப்புக்கான நாடகமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
தமிழர்களின் பிரச்சனைகளை வைத்து அரசியல் நாடகங்களை மேற்கொள்ளாமல் தூய மனதுடனும், நேர்மையுடனும் செயற்பட வேண்டும். மாறாக நாம் தீர்வை நோக்கி நகரும் போது தமக்கும் அதில் அரசியல் ஆதாயம் கிடைக்கவேண்டும் என இவ்வாறான போராட்டங்களை மேற்கொள்வது மக்களை ஏமாற்றும் செயலாகும்.
எனவே, காணி கையகப்படுத்தல் விடயத்தில் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கான முனைப்போடு அடுத்தமாத முற்பகுதியில் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் கௌரவ C. B. ரத்நாயக்க அவர்கள் யாழ் மாவட்டத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டு மக்களோடும் அதிகாரிகளோடும் பேச்சுவார்த்தை செய்யவுள்ளார். அச்சந்தர்ப்பத்தில் தாங்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைக்குமாறு தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
Post a Comment