காரைநகர் - ஊர்காவற்றுறை பாதையின் எஞ்சின் பழுதடைந்தது: அசமந்தமாக இருக்கின்றது ஆர்.டி.ஏ? - Yarl Voice காரைநகர் - ஊர்காவற்றுறை பாதையின் எஞ்சின் பழுதடைந்தது: அசமந்தமாக இருக்கின்றது ஆர்.டி.ஏ? - Yarl Voice

காரைநகர் - ஊர்காவற்றுறை பாதையின் எஞ்சின் பழுதடைந்தது: அசமந்தமாக இருக்கின்றது ஆர்.டி.ஏ?



காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதை கடந்த மூன்று தினங்களாக சேவையில் ஈடுபடாமையால் பெரும் இடர்பாடுகள் எதிர்நோக்கப்படுகின்றன.
குறிப்பாக, ஊர்காவற்றுறை பிரதேச செயலகம், ஊர்காவற்றுறை நீதிமன்று, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை போன்றவற்றில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
பாதையின் வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளமையாலேயே சேவை நிறுத்தப்பட்டுள்ளது என காரணம் கூறப்பட்டுள்ளது.
மேற்படி பாதையில் கேபிள் அறுந்துபோதல், வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைதல் போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் அடிக்கடி இடம்பெற்றது. எனினும், பின்னர் புதிய கேபிள் இணைக்கப்பட்டு அண்மைக்காலமாக தடையின்றி சேவை இடம்பெற்றது.
இரு வெளியிணைப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, ஒன்று பழுதடைந்தால் மற்றையதை பயன்படுத்தும் நடைமுறை பின்பற்றப்பட்டது. ஆனால், தற்போது பொருத்தப்பட்டிருந்த ஒரு வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளது எனக் கூறி மூன்று தினங்களாக பாதை சேவையில் ஈடுபடாமல் உள்ளது.
அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் தற்காலிகமாக ஒழுங்குபடுத்தப்பட்ட மோட்டார் படகில் ஆபத்துக்களுக்கு மத்தியில் தினமும் பயணம் செய்கின்றனர். படகில் மோட்டார் சைக்கிள்களை ஏற்றி இறக்குவதில் பெரும் சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன.
வீதி அபிவிருத்தி அதிகார சபை ஒரு வெளியிணைப்பு இயந்திரத்தை மூன்று நாள்களுக்கு திருத்தம் செய்கின்றதா என பாதைப் பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே, பாதையின் சீரான சேவைக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post