இந்திய அரசின் நிதியுதவியுடன், யாழ் இந்தியத் துணைக் தூதரகத்தின் ஏற்பாட்டில் "ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் முகாம்" யாழ் மாவட்டத்தில் மார்ச் மாதம் 13ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை, யாழ். மாவட்ட முகாமைத்துவ திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
வலுவிழந்தோருக்கு சேவை செய்யும் பகவான் மகா வீரர் சஹயட சமித்தி (BHAGWAN MAHAVEER VIKLANG SAHAYATA SAMITI) தொண்டு நிறுவனமும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு அலுவலகமும் இணைந்து இம்முகாமை நடாத்துகின்றனர்.
இதுதொடர்பான கலந்துரையாடல் கடந்த பெப்ரவரி மாதம் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களுக்கும், பகவான் மகா வீரர் சஹயட சமித்தி (Bhagwan Mahaveer Viklang Sahayata Samiti) தொண்டு நிறுவனத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் சதீஷ் சி மேத்தா ஆகியோருக்கிடையில் நடைபெற்றிருந்தது.
இதில், வடக்கில் போரினால் அங்கங்களை இழந்த மற்றும் இதர காரணங்களால் அங்கங்களை இழந்த வறுமைப்பட்ட மக்களை கருத்தில்கொண்டு ஜெய்பூர் செயற்கை கால் பொருத்தும் முகாமை யாழ் மாவட்டத்தில் நடாத்துவது தொடர்பிலும், யாழ் மாவட்டத்தில் Jaipur Foot நிறுவனத்தின் கிளையொன்றை நிறுவுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அதனடிப்படையில் முதற்கட்டமாக, ஜெய்பூர் செயற்கை கால் பொருத்தும் முகாம் நாளை (13.03.2022) தொடக்கம் எதிர்வரும் 30ம் திகதி வரை இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இம்முகாமில் கலந்து கொள்ளும் பயனாளிகள் தமது பதிவுகளை தத்தமது பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ள முடியும்.
கடந்த 35 வருடங்களாக 1.2 மில்லியன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றிவரும் பகவான் மகா வீரர் சஹயட சமித்தி தொண்டுநிறுவனம் கடந்த 2010 ம் ஆண்டில் போரில் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களுக்கும் சேவையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment