ஹிட்லரின் 4 வதை முகாம்களில் இருந்து தப்பித்தவர் புதினின் ஷெல் தாக்குதலில் பலியானார் - Yarl Voice ஹிட்லரின் 4 வதை முகாம்களில் இருந்து தப்பித்தவர் புதினின் ஷெல் தாக்குதலில் பலியானார் - Yarl Voice

ஹிட்லரின் 4 வதை முகாம்களில் இருந்து தப்பித்தவர் புதினின் ஷெல் தாக்குதலில் பலியானார்




ஹிட்லரின் நான்கு நாஜி வதை முகாம்களில் இருந்து உயிர்தப்பிய நபர் ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 27-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இதனால் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் குறிப்பாக துறைமுக நகரங்கள் மீது ரஷ்யா தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஜெர்மனி நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லர் நடத்திய நாஜி வதை முகாம்களில் இருந்து தப்பிய 96 வயது முதியவர் ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் போரிஸ் ரோமன்சென்கோ. இவருக்கு வயது 96. இவர் உக்ரைன் நாட்டின் கார்கிவ் பகுதியில் வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்ய ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் இவர் உயிரிழந்தார்.

இது குறித்து உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். “96 வயதான போரிஸ் ரோமன்சென்கோ புச்சென்வால்ட், பீனெமுண்டே, மிட்டல்பாவ்-டோரா, பெர்கன்-பெல்சன் ஆகிய நான்கு நாஜி வதை முகாம்களில் இருந்து தப்பியவர். அவர் கார்கீவில் தனது அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

ஆனால், கடந்த வெள்ளி கிழமை அன்று ரஷ்ய ராணுவத்தின் வெடிகுண்டு இவரது வீட்டில் விழுந்து இவர் உயிரிழந்தார். ஹிட்லரிடம் இருந்து உயிர் பிழைத்த இவர் தற்போது புதினால் கொல்லப்பட்டுள்ளார்.” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வாதிகாரி ஹிட்லரை தனது படைகள் மூலம் சுற்றிவளைத்து அவரை தற்கொலை செய்து கொள்ளச் செய்தது இதே ரஷ்யா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post