தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டத்தின் மூலமாக முறைப்பாடுகளை கண்காணிக்கும் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எம்.எ.சுமந்திரன், இந்த சட்டத்தினால் தகவல் அறியும் சட்டமூலம் பாதிக்கப்படக்கூடாது. இந்த சட்டமானது ஊடக சுதந்திரத்தையும் பறித்து விடக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டமூல இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சுமந்திரன் எம்.பி. தொடர்ந்தும் பேசுகையில்,
தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அதில் திருத்தங்களை முன்னெடுக்கவும் சில ஏற்பாடுகளை மறுசீரமைப்பு செய்யவும் வேண்டும் எனவும், அதற்காக கால அவகாசம் தேவை எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல் சில ஏற்பாடுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன அதனை நாம் வரவேற்கின்றோம். சட்டமூலம் தொடர்பிலான யோசனையை நாம் முழுமையாக வரவேற்கின்றோம். ஆனால் இந்த சட்டமூலம் தொடர்பில் குழுநிலை விவாதத்தின் இணைப்புகளை முன்வைத்துள்ளனர். இதில் பல திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த பறிந்துரைகள் பல பக்கங்களை கொண்டுள்ளன. சிங்களத்தில் 28 பக்கங்களும், தமிழ் மொழியில் 42 பக்கங்களும், ஆங்கிலத்தில் 23 பக்கங்களும் காணப்படுகின்றன. இதன் மூலமாக இறுதி நேரம் வரையில் அரசாங்கம் திருத்தங்களை முன்னெடுத்துள்ளது என்பது வெளிப்படுகின்றது.
குறிப்பாக இதில் சுயாதீன நிறுவனத்தை அரசாங்கம் நிருவகிக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில் அது இறுதி நேரத்தில் மாற்றப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.. அதேபோல் ஏனைய கரிசனைகளையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். சட்டமூலத்தை திருத்த காலம் வழங்கியதாகவும், ஏன் நீதிமன்றத்தை நாடவில்லை எனவும் அரசாங்கம் கேள்வி எழுப்புகின்றது. இந்த சபையில் கலந்துரையாடி, வாதிட்டு இவற்றை திருத்திக்கொள்ள முடியும் என்பதே எமது கருத்து . எமது கரிசனைகளை கருத்தில் கொண்டு ஏன் திருத்தங்களை செய்ய முடியாது?இந்த சபை அவ்வாறே இருக்க வேண்டும். இந்த அதிகார சபை சுயாதீனமாக இருக்க வேண்டும். ஆனால் அதில் கேள்வி உள்ளது. அரசாங்கம் தலையிடாது என்ற வார்த்தையை கூறினாலும், அரசாங்கம் அதில் தலையிடும். எனவே செய்யும் மாற்றங்களை உண்மையிலேயே நடைமுறையில் கொண்டு வரும் விதமாக சுயாதீனமாக கையாள வேண்டும். வெறும் வார்த்தைகளில் மட்டுமே இதனை உள்ளடக்கக்கூடாது.
அதேபோல் தகவல் அறியும் சட்டமூலத்தை கொண்டுவந்தமை கூட இந்த பாராளுமன்றத்தில் கண்ட மிகப்பெரிய வெற்றியாக கருதுகின்றோம்.
இது ஒரு அடிப்படை உரிமை . அதனையும் பலவீனப்படுத்திவிடக்கூடாது. அரசாங்கம் இதனையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். இந்த சட்டத்தினால் தகவல் அறியும் சட்டமூலம் பாதிக்கப்படக்கூடாது.
மேலும், இந்த சட்டமானது ஊடக சுதந்திரத்தை பாதித்துவிடக்கூடாது, சில ஊடக அமைப்புகளும் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர். அதாவது ஊடக நோக்கங்களும் இதில் உள்வாங்கப்பட வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து இப்போதும் கருத்தில் கொள்ள முடியும் என்றார்.
Post a Comment