சைவ ஆலயமான இவ்வாலயத்தில் எந்த மதத்தவர்களும் வந்து வழிபட முடியும் எனவும், அவர்கள் தமது மதச் சின்னங்களை நிறுவுவதற்கோ அது சார்ந்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கோ முருகன் அடியார்களும் ஊர் மக்களும் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (16) புதன்கிழமை பிற்பகல் 4.30 மணியளில் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
மேற்படி முருகன் ஆலய உள் வீதியில், தீர்த்தக் கேணிக்கு அருகே, நீண்ட காலமாக அரச மரம் ஒன்று உள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர் அவ்வப்போது ஆலயத்திற்கு வருகின்ற பிக்குகள் முருகனை வழிபட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், நாளை பௌர்ணமி தினத்தன்று இங்குள்ள அரச மரத்தின் கீழ் புத்தர் சிலையொன்றை வைத்து பிரித் ஓதுவதற்கு பிக்குகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி இருந்தன. குறித்த செய்தி அறிந்த மக்கள் கடும் சீற்றமடைந்தனர்.
இது தொடர்பாக ஆலயத்தில் இன்று விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தின்போது சைவ ஆலயமான பறாளாய் முருகன் ஆலயத்தில் புத்தர் சிலை வைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிக்கு கடும் கண்டனமும் வெளியிடப்பட்டது.
இக்கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வலி.மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் த.நடனேந்திரன், சட்டத்தரணி சுகாஸ், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் திருமதி ச.அனந்தி மற்றும் வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச மக்கள் எனப் பலர் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.
இதேவேளை, கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது படைப் புலனாய்வாளர்கள் பலர் ஆலயத்திற்கு அண்மையில் நின்று கூட்டத்தை அவதானித்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment