பாகிஸ்தானில் கடத்தல் முயற்சியின் போது எதிர்ப்பு தெரிவித்த இந்து மதத்தை சேர்ந்த இளம்பெண் நடுத்தெருவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
லாகூர்,
கடத்தல் முயற்சியின் போது எதிர்ப்பு தெரிவித்த இந்து இளம் பெண் நடுத்தெருவில் சுட்டுக்கொலை - பாகிஸ்தானில் கொடூரம்
இஸ்லாமிய மதத்தினர் பெரும்பான்மையாக பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினராக இந்து, சீக்கியம், கிருஸ்தவ மதத்தினரை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்கள் அரங்கேறி வருகிறது. மேலும், சிறுபான்மையினராக வாழ்ந்துவரும் அந்த மதத்தினரின் பெண்கள் கடத்தி, கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்யும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் சிந்து மாகாணம் ரோகி நகரில் இந்து மதத்தை சேர்ந்த பூஜா குமாரி (வயது 18) என்ற இளம்பெண் நேற்று இரவு தனது வீடு அருகே உள்ள தெருவில் நடத்து சென்றுகொண்டிருந்தார்.அப்போது, அந்த இளம்பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கடத்திச்செல்ல முயன்றுள்ளது. பூஜா குமாரியை கட்டாய திருமணம், மதமாற்றம் செய்யும் நோக்கத்தோடு அதே பகுதியை சேர்ந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த வாஹித் லஷ்கரி என்ற இளைஞன் தனது நண்பர்களுடன் இணைந்த இந்த கடத்தல் முயற்சியில் ஈடுபட்டுள்ளான்.
ஆனால், இந்த கடத்தல் முயற்சியின் போது பூஜா குமாரி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வாஹித் மற்றும் அவனது நண்பர்கள் பூஜா குமாரியை நடுத்தெருவில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பூஜா குமாரி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட பூஜா குமாரியின் உடலை கைப்பற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
மேலும், இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான வாஹித் லஷ்கரி கைது செய்யப்பட்டுள்ளான். பூஜா குமாரியை ஏற்கனவே கடத்தி கட்டாய திருமணம் செய்ய வாஹித் முற்சித்ததாகவும், அந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில் நேற்று மீண்டும் இரண்டாவது முறை கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது கடத்தல் முயற்சியின் போது பூஜா குமாரி எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை வாஹித் தனது நண்பர்களுடன் சேர்ந்து சுட்டுக்கொன்றுள்ளான். பாகிஸ்தானில் கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து மதத்தை சேர்ந்த இளம்பெண் நடுத்தெருவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment