ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும் - விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் வாக்குமூலம் - Yarl Voice ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும் - விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் வாக்குமூலம் - Yarl Voice

ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும் - விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் வாக்குமூலம்



ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும் என விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், 90 சதவீத விசாரணை நிறைவடைந்துள்ளதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அது குறித்து ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்து வந்தார். 

அந்த வகையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்கு ஆஜராக இதுவரை 8 முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால் பல்வேறு காரணங்களால் அவரால் இதுவரை ஆஜராக முடியவில்லை. இந்நிலையில் நேற்று காலை 11.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் இயங்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் 78 கேள்விகள் கேட்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானார். அவரிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.

அப்போது ஆணையத்தின் சார்பில், இடைத் தேர்தலையொட்டி அந்த படிவங்களில் ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது தெரியுமா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், "திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும்.

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரது உடல்நலம் குறித்து சசிகலா என்னிடம் ஓரிரு முறை ஜெயலலிதா நன்றாக இருப்பதாக கூறினார். இந்த தகவல் குறித்து நான் சக அமைச்சர்களிடம் மட்டுமே கூறினேன். 

பொதுவெளியில் இதுதொடர்பாக நான் பேசவில்லை.அரசாங்கப் பணி தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்தவொரு தகவலையும் என்னிடம் தெரிவிக்கவில்லை.

ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது குறித்து எனக்குத் தெரியாது” என்று கூறியுள்ளார்.

மேலும் 2016 டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா இறப்பதற்கு முன் நான் உட்பட 3 அமைச்சர்கள் நேரில் அவரை பார்த்தோம்.எக்மோ பொருத்தப்பட்டது தொடர்பாக அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் தெரிவித்தார் என கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான கேள்விகளை ஓ.பன்னீர் செல்வத்திடம் கேட்பதற்கு அப்போலோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சிகிச்சை குறித்து எதுவும் தெரியாது என்றே நேற்றே அவர் கூறிவிட்டார் என மருத்துவமனை தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ள ஓ.பன்னீர்செல்வத்திடம் சசிக்கலா தரப்பு தற்போது குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post