எனது மகன் கடத்தப்பட்டுள்ளார். ஆதாரங்கள் இருந்தும் பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கடந்த ஜனவரி 27 ஆம் திகதி காணாமல் போன பாலகிருஸ்ணன் நிரேஸ் என்ற வவுனியா இளைஞனின் தாயார் திருமதி கணேஸ் பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஊடக அமையத்தில் (27.03) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது மகன் பாலகிருஸ்ணன் நிரேஸ் அவர்கள் கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி காணாமல் போயுள்ளார். அவர் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு குருமன்காடு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு முன்னால் தனது மோட்டர் சைக்கிளை நிறுத்திவிட்டு அவ் வர்த்தக நிலையத்திற்கு காணாமல் போன தினம் பிற்பகல் 5.02 இற்கு சென்றுள்ளார்.
அதன்பிறகு அவன் தனது மோட்டர் சைக்கிளை எடுப்பதற்கு வெளியில் வரவில்லை. அவரது மோட்டர் சைக்கிளை 6.47 நிமிடத்திற்கு வேறு ஒருவர் வந்து எடுத்துச் செல்வதை சிசீரீவி வீடியோவில் காண முடிகிறது. இதனை நான் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளேன். இது தொடர்பில் நான் ஜனவரி 29 ஆம் திகதி வவுனியா பொலிஸ் நிலையத்தில் சிறு குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தேன்.
எனது மகனை காணவில்லை என நான் முறைப்பாடு செய்தேன். ஆனால் எனது மகன் இரண்டு நாளாக வீட்டிற்கு வரவில்லை என தான் முறைப்பாட்டு கொப்பியில் எழுதப்பட்டுள்ளது. நான் கொழும்பிலும் இது தொடர்பில் அண்மையில் முறைப்பாடு செய்துள்ளேன். பொலிசார் தேடிக் கொண்டிருப்பதாக கூறுகிறார்களே தவிர, இரண்டு மாதங்களுக்குள் எந்தவித காத்திரமான பதிலும் எனக்கு கிடைக்கவில்லை.
செட்டிகுளத்தில் இருந்து நபர் ஒருவர் என்னிடம் 15 இலட்சம் கப்பம் கோரினார். மூன்றரை இலட்சம் உடனடியாக தந்தால் மகனை விடுவதாக கூறியிருந்தார். அவர் பொலிஸ் முறைப்பாட்டு துண்டின் பிரதி, மகனின் போட்டோ, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் அவர்களின் கடிதம் என்பவற்றை தருமாறு கோரினார். நாம் குறித்த நபரின் குரல் பதிவை பதிவு செய்து பொலிசாரிடம் கொடுத்தோம். அதனடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். போதியளவிலான ஆதாரம் இல்லை என அவரை விடுவித்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் அந்த நபரை விசாரித்தால் எனது மகனை கண்டு பிடிக்க முடியும்.
எனது மகன் குருமன்காடு பகுதியில் உள்ள குறித்த வர்த்தக நிலையத்தில் தனது இரண்டரை வருட உழைப்பு பணத்தை வழங்கியுள்ளார். குறித்த வர்த்தக நிலையத்தின் முகாமையாளிடம் 85, 90 இலட்சம் ரூபாய் வரை செலுத்தியுள்ளார். தனது 30 ஆவது வயதில் மகன் புதிய தொழில் செய்ய திட்டமிட்டு இருந்தார். அந்தப் பணத்தைக் கேட்டு சென்ற போது தான் அவர் கடத்தப்பட்டுள்ளார். இதுவரை அவரை விடவில்லை. இரண்டு மாதம் கடந்து விட்டது. நான் ஒவ்வொரு இடமாக தேடி வருகின்றேன். ஊடகங்கள் மூலமாவது நீதி கிடைக்குமா என நம்பித் தான் இங்கு வந்துள்ளேன்.
எனது மகனை பிடித்து வைத்திருக்கிறார்கள். அவரை வைத்து என்ன செய்கிறார்களோ தெரியாது? எனது மகனின் மோட்டர் சைக்கிளும் இதுவரை இல்லை. அவரது வங்கி அட்டைகளும் இல்லை. அவரது வங்கி கணக்குகள் பொலிசாரிடம் கொடுத்தோம். அவர்கள் பார்க்கிறோம் என்கிறார்கள். ஆனால் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்ற நிலையிலேயே அவரை காணவில்லை. அதனால் அதன் உரிமையாளர் மற்றும் முகாமையாளர் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
எனது மகன் தனது நண்பர் ஒருவரின் 5 இலட்சம் பணத்தை வாங்கி குறித்த வர்த்தக நிலையத்திற்கு வழங்கியுள்ளார்.; எனது மகன் காணாமல் போன பின் மகனின் நண்பர் குறித்த வாத்தக நிலையத்திற்கு சென்று தனது 5 இலட்சம் பணத்தை தருமாறு கோரினார். இதன்போது நிரேஸ் கொடுக்கச் சொன்னது என்று கூறி 5 இலட்சம் பணத்தை கொடுத்துள்ளனர். எனது மகன் காணாமல் போன பின் தான் இந்தச் சம்பவம் நடந்தது. மகன் பணத்தை எப்போது கொடுக்கச் சொன்னவர் என்பதை அறிய வேண்டும். எனவே எனது மகன் கடத்தப்பட்டுள்ளார். அவர் கண்டுபிடிக்க பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
Post a Comment