தேசிய அரசு அமைவது குறித்து வெளிவந்துகொண்டிருக்கும் செய்திகளை திட்டவட்டமாக நிராகரித்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்று அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினார். நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டது.
இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் இணைத்துக்கொண்டு தேசிய அரசு அமைப்பது பற்றி செய்தி அடிபடுவது குறித்து கேள்வி எழுந்தது.
இதற்குப் பதிலளித்த பிரதமர்,
"தேசிய அரசொன்று அமையலாம் என்பது வெறும் பேச்சுதான். இருக்கும் அரசு பலமானதாக இருக்கின்றதே. இப்படியொன்று நடக்கின்றதா என்பது எனக்குத் தெரியாதே? சிலவேளை ரணிலுக்கு மனதில் ஆசை (பிரதமராக வேண்டும் என) இருக்கலாம். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?'' - என்றார்.
அரசு இப்போது முன்னாள் பிரதமர் ரணிலிடம்தான் ஆலோசனைகளைக் கேட்பதாக சில செய்திகள் கூறுகின்றனவே என்ற கேள்விக்குப் பதிலளித்த பிரதமர்,
"வங்கியொன்றைக் கொள்ளையிட வேண்டுமானால் ரணிலிடம் ஆலோசனை கேட்கலாம். அரசியல் ஆலோசனைகளை அவரிடம் கேட்குமளவுக்கு அரசு இன்னும் தாழ்ந்துவிடவில்லை" - என்றார்.
Post a Comment