தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் தேர்திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம்.
இந்த சூழலில் களிமேடு அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, திருவிழா தேரோட்டம் நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. தேர் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், அதிகாலை 3 மணியளவில் களிமேடு பகுதியில் உள்ள பூதலூர் சாலையில் திருத்தேர் வந்தபோது உயர்மின் அழுத்த கம்பி உரசியதில் தேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து படுகாயமடைந்த அனைவரும் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால், தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment