பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவெடுப்பதற்கான உரிய அதிகாரம் கொண்டது மத்திய அரசா? மாநில அரசா? என்ற சர்ச்சைக்கு மத்தியில் அவரது விடுதலை குறித்து தெளிவான முடிவை ஒருவார காலத்தில் இந்திய மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர்.
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக யார் முடிவெடுப்பது? என்ற குழப்பத்திற்குள் செல்லாமல் அவரை ஏன் நீதிமன்றமே விடுதலை செய்யக்கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோதே நீதிபதிகள் இவ்வாறு கேள்வி எழுப்பினர்.
பேரறிவாளன் தரப்பில் இன்று மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி, பேரறிவாளன் விடுதலை தொடர்பாக, தமிழ்நாடு அமைச்சரவை பரிந்துரைத்தும் ஆளுநர் இதுதொடர்பாக முடிவெடுக்கவில்லை என தெரிவித்தார்.
அத்துடன், 32 ஆண்டுகால சிறை வாழ்க்கையில் பேரறிவாளன் நன்னடத்தையுடனும், முன்மாதிரி நபராகவும் செயல்பட்டுள்ளார். எனவே, அவரை விடுதலை செய்ய வேண்டும் என கோரினார்.
இதையடுத்து நீதிபதிகள், யார் விடுதலை செய்ய வேண்டும் என்ற குழப்பத்திற்கிடையில் ஏன் பேரறிவாளன் சிக்கிக்கொள்ள வேண்டும்? நாமே ஏன் விடுதலை செய்யக்கூடாது? என தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் ராகேஷ் துவிவேதியிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த துவிவேதி, இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதற்கான உரிய அதிகாரம் கொண்ட அரசு எது? என்பதுதான் இங்கு சர்ச்சையாக உள்ளது என்றார்.
இதையடுத்து மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ், அமைச்சரவையின் தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதற்கு, இதுகுறித்து ஆளுநர் முடிவு எடுக்காமல், எந்த விதியின் அடிப்படையில் ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளார்?என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அமைச்சரவையின் தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்புவதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா?" எனவும் அவர்கள் கேட்டனர்.
ஆளுநருக்கு அதிகாரம் இல்லாத விவகாரம் அவர் பார்வைக்கு அனுப்பப்பட்டால், அதை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் அதிகாரம் உள்ளது. மாறாக, ஆளுநர் முடிவெடுத்திருந்தால், தன் அதிகாரத்தை மீறுவது போன்றதாகும் என சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களின் பின்னர் இந்த வழக்கு விசாரணையை அடுத்த புதன்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த ஒருவார காலத்தில் பேரறிவாளன் விடுதலை குறித்து தெளிவான முடிவை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதே வேளை, இவ்விவகாரத்தில் யார் முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்தும் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும் நீதிபதிகள் பணிப்புரை விடுத்தனர்.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரொபேர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் தற்போது தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
பேரறிவாளன் 32 ஆண்டுகளாக இந்த வழக்கில் சிறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு, அவருக்கு பிணை வழங்கி கடந்த மாதம் உத்தரவிட்டது. பேரறிவாளனின் 32 ஆண்டுகால சிறைவாசத்தில் அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
ராஜீவ் கொலை வழக்கில் தற்போது தண்டனை அனுபவித்துவரும் 7 பேரில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தூக்கு தண்டனை 2014ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment